ADDED : செப் 17, 2011 11:44 PM
உடுமலை: இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் வாங்கிய நான்கு ஆடுகள் இறந்தது குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், ஒரே நாளில் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு, ஆடுகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு, திருப்பூர் மாவட்டத்தில் போடிபட்டி ஊராட்சி, முன்னோடி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.
பயனாளிகளுக்கு ஆடுகள் வாங்க கொள்முதல் கமிட்டி அமைக்கப்பட்டு, மூலனூர், கன்னிவாடி, முத்தூர் சந்தைகளில் நேரடியாக 636 ஆடுகள் வாங்கப்பட்டன. போடிபட்டியைச் சேர்ந்த பத்மா, காமராஜ் நகரை சேர்ந்த தெய்வநாயகி, கருப்பாத்தாள், வேலம்மாள் ஆகிய பயனாளிகள் கொள்முதல் செய்த ஆடுகளில், தலா ஒன்று வீதம் நான்கு ஆடுகள், கடந்த 15ம் தேதி இரவு இறந்தன. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. நேற்று, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் முத்துகோபாலகிருஷ்ணன் தலைமையிலான கால்நடை துறை டாக்டர்கள், ஆடுகள் இறப்புக்கான காரணம் குறித்து, மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை அளித்தனர். இதில், தட்பவெப்ப மாறுதல் மற்றும் ஜீரணிக்காத உணவுகளை ஆடுகளுக்கு வழங்கியதால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. கொள்முதல் செய்தவுடன், ஆடுகள் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால், உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவும், அத்தொகையை கொண்டு மீண்டும் பயனாளிகளுக்கு ஆடுகள் வாங்கவும், கால்நடை துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. மாலை, உடுமலை தாலுகா அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட பயனாளிகள், கிராம கொள்முதல் கமிட்டி மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் மதிவாணன் தலைமையில் நடந்தது. நான்கு பயனாளிகளுக்கும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் சார்பில், இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இத்தொகையில், பயனாளிகளுக்கு மீண்டும் ஆடு வாங்கப்பட உள்ளது.