அரசுத்துறை அலட்சியத்தாலும் ஜெயங்கொண்டம் மின் திட்டம் மாயம்
அரசுத்துறை அலட்சியத்தாலும் ஜெயங்கொண்டம் மின் திட்டம் மாயம்
ADDED : செப் 22, 2011 02:11 AM

தமிழக மின்துறை, தொழிற்துறை மற்றும் என்.எல்.சி., ஒருங்கிணைந்து செயல்படாமல், அலட்சியமாக இருந்ததும், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் முடங்கியதற்கு முக்கிய காரணம் என, அதிகாரிகள் தற்போது தெரிவித்த கருத்துகளில் இருந்து வெளிப்படுகிறது.அரசியல் போராட்டங்கள், நில ஆர்ஜித பிரச்னைகளால் திட்டம் முடங்கியதாகவும், திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்கள், ஏமாற்றத்துடன் காத்திருப்பதாகவும், கடந்த, 19ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் விரிவான கட்டுரை வெளியானது.இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் திட்டம் குறித்து கேட்டபோது, எந்த துறையினரும் பொறுப்பேற்க மறுத்தனர்.இதுகுறித்து, என்.எல்.சி., அதிகாரி கூறியதாவது:எங்களை பொறுத்தவரை ஜெயங்கொண்டம் திட்டத்தை கொண்டு வர தயாராக உள்ளோம்.
ஆனால், நிலத்தை கையகப்படுத்தி, மாநில அரசு தன் வசம் வைத்துக்கொண்டதுடன், ஒதுங்கிக் கொண்டது.
நிலமும், உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், நாங்கள் எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாது.
மாநில அரசு தன்னுடைய மின் தேவைக்கு, ஜெயங்கொண்டம் திட்டம் வேண்டுமென நினைத்தால், எங்களை அணுகட்டும். ஒத்துழைப்பு தருகிறோம். நாங்களாக முடிவெடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக மின்துறை மேலதிகாரி கூறியதாவது:மின் தட்டுப்பாடை சமாளிக்க, இத்திட்டம் அவசியமானது. இத்திட்டத்தை கவனிக்க தனி அதிகாரியை நியமித்துள்ளோம். ஆனால், மத்திய பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி., தமிழக தொழிற்துறையுடன் இணைந்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் எங்கள் பங்கு எதுவும் இல்லை.
மின்சாரம் உற்பத்தி செய்து கொடுத்தால், வாங்கி கொள்ள தயாராக உள்ளோம். மின் சப்ளையை பெறுவதற்குரிய கட்டமைப்பு வசதிகளை செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், இதில் மத்திய, மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தியுள்ள தொழிற்துறையில் விசாரித்த போது, இன்னும் வித்தியாசமான பதில் கிடைத்தது. அங்குள்ள அதிகாரி கூறும்போது, 'நாங்கள் நிலத்தை கையகப்படுத்தி, பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். நிலத்திற்கு, என்.எல்.சி., நிறுவனம் உரிய நிதி கொடுக்காமல் ஒதுங்கி விட்டது. நிதி பங்கீடு செய்யாமல், என்.எல்.சி., நிறுவனம் நிலம் கேட்பது நியாயமில்லை. தமிழக மின்துறை எந்த விதத்திலும் பங்களிப்பு தரவில்லை' என்றார்.
இப்படி, மத்திய, மாநில அரசுத்துறைகள், தங்களுக்குள் போட்டா போட்டி போட்டு, காரியத்தை கெடுத்து கொண்டுள்ளன. பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் வரவேண்டிய திட்டம், ஒத்துழைப்பு கிடைத்தும், துறை ரீதியான போட்டிகளால் முடங்கியுள்ளது. ஆனால், அரசின் திட்டத்திற்காக நிலத்தை அள்ளி கொடுத்தவர்கள் தான், உரிய நிதி கிடைக்காமல், உரிய நீதியாவது கிடைக்குமென, சிறப்பு கோர்ட்களின் படிகளில் தங்கள் வழக்கறிஞர்களுடன் ஏறி, இறங்குவது பரிதாபமாக உள்ளது.- ஹெச்.ஷேக்மைதீன் -