ஓய்வூதிய பலன்களை வட்டியுடன் தர வேண்டியதில்லை: ஐகோர்ட்
ஓய்வூதிய பலன்களை வட்டியுடன் தர வேண்டியதில்லை: ஐகோர்ட்
ADDED : செப் 23, 2011 11:06 PM
மதுரை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்களை வட்டியுடன் தர வேண்டியதில்லை என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
போக்குவரத்து கழக தொழிலாளர் 6,000 பேர் சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 6,000 பேருக்கு, 2010ல் ஓய்வூதிய பலன்கள் கிடைத்தன.
ஆனால், 2001-09 ஆண்டிற்கான வட்டித்தொகை வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கில் வட்டித்தொகையை வழங்கும்படி, போக்குவரத்து கழகத்திற்கு ஐகோர்ட் கிளை தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் போக்குவரத்து கழகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜரானார். நீதிபதிகள், ''போக்குவரத்து கழகம், தொழிலாளர்கள் ஆகியோரின் இருதரப்பு பங்களிப்பு தொகை ரூ.205 கோடி ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதை ரிலீஸ் செய்ய, ரிசர்வ் வங்கி தாமதித்துள்ளது. இதில் போக்குவரத்து கழகத்திற்கு தொடர்பில்லை. வட்டித்தொகையை தர வேண்டியதில்லை,'' என உத்தரவிட்டனர்.