வாடிக்கையாளர் சேவை மையத்தை மூடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
வாடிக்கையாளர் சேவை மையத்தை மூடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
ADDED : செப் 25, 2011 06:05 AM
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தை மூட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் வசதிக்காக, காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தை, நாடு முழுவதும் துவக்கியது.
'முதல்தரம்' என பெயரிடப்பட்ட இந்த மையங்கள், விடுமுறை நாட்களிலும் செயல்படும். சென்னை வட்டத்தில் இதுபோல, 10 மையங்கள் உள்ளன. இந்த மையங்களை மூடும்படி, தமிழக பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
'இந்த மையங்களைத் தேடி, காலை ஒரு மணி நேரமும், மாலையில் நான்கு மணி நேரமும் வாடிக்கையாளர்கள் வருவதில்லை. இதனால், மின்சார செலவும், வேலைப்பளுவும் அதிகரிக்கிறது. இந்த மையங்களால் வருவாய் உயரவில்லை. இந்த மையங்கள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை' என, தேசிய தொலைத்தொடர்பு பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் ஆண்டியப்பன் கூறியுள்ளார்.
ஆனால், பி.எஸ்.என்.எல்., நிர்வாக தரப்பு இந்த மையங்களை மூட விரும்பவில்லை.
தொலைத் தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியபாலன் கூறியதாவது:
இந்த சேவை மையங்களில், 'பணம் செலுத்தும் பிரிவு' மாலை 4 மணியுடன் முடிகிறது. அதன் பின், வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள், கட்டணங்களை வசூலிப்பதில்லை. இதனால், மாலை 4 மணிக்கு மேல், வாடிக்கையாளர்கள் சேவை மையங்களுக்கு வருவதில்லை.
சேவை மையம் செயல்படும் நேரம் வரை, பணம் செலுத்தும் பிரிவும் செயல்பட்டால், இந்த மையத்திற்கு வரவேற்பு அதிகரிக்கும். அற்ப காரணங்களைக் கூறி, இம்மையங்களை மூட அனுமதிக்கக் கூடாது. இந்த மையங்களில்,'ஷிப்டு' முறையில் தான் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். எனவே, பணிச்சுமை அதிகம் என்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு சத்தியபாலன் கூறினார்.-பா.சேதுராமன்-

