டி.எம்.எஸ்., வளாகத்தில் அமைகிறதுபுதிய மருத்துவ பணியாளர் தேர்வாணையம்
டி.எம்.எஸ்., வளாகத்தில் அமைகிறதுபுதிய மருத்துவ பணியாளர் தேர்வாணையம்
ADDED : செப் 25, 2011 06:16 AM
சுகாதாரப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான, புதிய மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் அமைக்கப்படுகிறது.முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி, தனி தேர்வாணையம் அமைப்பதற்கான பணிகளை, சுகாதாரத் துறை அதிகாரிகள் முனைப்புடன் செய்து வருகின்றனர்.
இதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திலிருந்து பிரித்து, தனி மருத்துவப் பணியாளர் வாரியம் அமைப்பதற்கு உரிய வகையில் விதிகளில் திருத்தம் செய்வதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் கூறும்போது, ''புதிய தேர்வாணையம் அமைக்கும் பணி விரைவாக நடக்கிறது. இதற்கான அலுவலகம் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் டி.எம்.எஸ்., வளாகத்தில் அமையும். உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, புதிய தேர்வாணையம் செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.
சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறும்போது, ''புதிய தேர்வாணையம் டி.எம்.எஸ்., வளாகத்தில் அமைக்கப்படும்,'' என்றார்.
சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையில் அமையும் இத்தேர்வாணையத்தில், மருத்துவத் துறை துணை இயக்குனர், உறுப்பினராகவும், மாவட்ட வருவாய் அதிகாரிக்கு இணையான அந்தஸ்தில் உள்ள அதிகாரி, உறுப்பினர் செயலராகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பணியாளர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. சுகாதாரத் துறையில் மொத்தம் 91 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில், 15 ஆயிரத்து 689 இடங்கள் காலியாக உள்ளன. இது, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட கணக்கு. இக்கணக்குபடி பார்த்தால், 20 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், நடைமுறையில் 10 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில், ஆறு பேர் தான் பணியில் உள்ளனர். விடுப்பில் செல்வோர், அயல் பணிக்குச் செல்வோர் என, 40 சதவீத பணியிடங்கள் எப்போதும் காலியாக இருந்து வருவதாக மருத்துவத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுவரை, மற்ற துறைகளைப் போல், சுகாதாரத் துறைக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் தேர்வு நடத்தி, டாக்டர்களையும் இதர மருத்துவத் துறை ஊழியர்களையும் தேர்வு செய்து வந்தது. ஆனால், கடும் பணிச் சுமை காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டாக்டர்களையும், மருத்துவ ஊழியர்களையும் தேர்வு செய்வதற்கு மிகவும் காலதாமதமானது.
உதாரணமாக, இளநிலை உதவியாளர் பணிக்கு, 200 இடங்களுக்கு, 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால், விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டாண்டுகள் ஆகிவிடுகிறது. இதுபோன்று, பல்வேறு துறை பணியிடங்களுக்கும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்வதால், காலியாக மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகிறது. ஆனால், மருத்துவச் சேவை, அவசர, அத்தியாவசிய சேவை என்பதால், ஆள் பற்றாக்குறை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய தனி தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கை, பணிச் சுமையால் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் சுகாதாரத் துறைக்கு ஆக்சிஜன் கொடுத்தது போல் அமைந்துள்ளது.
புதிய தேர்வாணைய அறிவிப்பை, அரசு டாக்டர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து, சங்கத் தலைவர் கனகசபாபதி கூறும்போது, ''எங்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். அதை ஏற்று, முதல்வர் புதிய தேர்வாணையம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்,'' என்றார்.
புதிய தேர்வாணையம் மூலம் தற்போது காலியாக உள்ள 15 ஆயிரத்து 689 இடங்களை நிரப்புவதோடு, அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கூடுதல் டாக்டர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தேர்வு செய்து நியமிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.-எஸ்.ராமசாமி-