ADDED : செப் 25, 2011 06:20 AM
சென்னை:சிக்கிம் மாநிலத்தில், பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஸ்ரீசத்யசாய் அமைப்பு, நிவாரணப் பொருட்கள் வழங்கவுள்ளது.இது குறித்து, ஸ்ரீசத்தியசாய் அமைப்பின் தலைமையிடமான பிரசாந்தி நிலையம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஸ்ரீசத்யசாய் அமைப்பு கிராமப்புற சேவை, இலவச மருத்துவ முகாம், நெறிசார் கல்வி, மருத்துவ உதவி, ஆன்மிக நடவடிக்கைகள் மற்றும் பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குஜராத் பூகம்பம், ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சுனாமி தாக்குதலுக்கு உட்பட்ட தமிழகப் பகுதிகள் ஆகிய இடங்களில், பகவான் சத்யசாயின் அறிவுரையான, அன்பு மற்றும் உதவி என்னும் கூற்றின்படி, ஸ்ரீசத்யசாய் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
அதேபோல், கடந்த, சில தினங்களுக்கு முன், சிக்கிமில் நடந்த பூகம்பத்தால், ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, ஸ்ரீசத்யசாய் அமைப்பு, பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 18ம் தேதி முதல் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.அதிக சேதத்திற்கு உள்ளான மாநிலத்தின் வடபகுதியில், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, 11 பேர் கொண்ட மீட்புக் குழுவினரை, மாநிலத்தின் வடபகுதிக்கு அனுப்பியுள்ளது. மற்றொரு தன்னார்வத் தொண்டு குழுவினர், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.