ADDED : அக் 06, 2011 10:03 PM
சூலூர் : சோமனூரில் நேற்று நடந்த விபத்தில், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இறந்தார்.
இதனால், இந்த பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. கோவை, கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம், 70; கருமத்தம்பட்டி நகர காங்., தலைவர். இரண்டு முறை கருமத்தம்பட்டி பேரூராட்சி கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் காங்., சார்பில், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நேற்று பகல் 12.30 மணிக்கு சோமனூர்- ராமாச்சியம்பாளையம் ரோட்டில் டூவீலரில் சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதி, பலத்த காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவ்விபத்து குறித்து, கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார். தப்பி ஓடிய லாரி டிரைவரை, தேடி வருகிறார். வேட்பாளர் இறந்ததால், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

