அமைச்சர் சிதம்பரம் வீட்டில்திருடிய மூன்று பேரின் "கைரேகை':டி.ஜி.பி., அலுவலகம் சென்றது
அமைச்சர் சிதம்பரம் வீட்டில்திருடிய மூன்று பேரின் "கைரேகை':டி.ஜி.பி., அலுவலகம் சென்றது
ADDED : ஆக 23, 2011 04:48 AM
காரைக்குடி:காரைக்குடி அருகே கண்டனூரில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உறவினர்களுக்கு, சொந்தமான பங்களாவில் திருடிய, மூன்று பேரின் கைரேகை, பரிசோதனைக்காக, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, கண்டனூர், மோதிலால் தெருவில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் உறவினருக்கு பாத்தியப்பட்ட, பழமையான பங்களா உள்ளது. இங்கு, யாரும் தங்குவதில்லை. மேனேஜர் ஆத்மநாதன் வீட்டை பராமரித்து வருகிறார்.கடந்த வாரம் (ஆக.,15) பங்களாவிற்குள் புகுந்த நபர்கள் கீழ்தளம், மேல் தளத்தில் உள்ள அறைகளின் ஜன்னல் கம்பி, கதவுகளை உடைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர்.
காட்டிக் கொடுத்த கைரேகை: கைரேகை நிபுணர்கள், பங்களாவில், சோதனை மேற்கொண்டனர். அப்போது, உலக்கை, தட்டு ஆகியவற்றில் பதிந்திருந்த ரேகையை சோதனை செய்தபோது, அது வெவ்வேறானவை என, போலீசாருக்கு தெரியவந்தது. இச்சம்பவத்தில் மூன்று பேர் கூட்டு சேர்ந்து நடத்தியது அம்பலமானது. உள்ளூர் மாவட்ட குற்றவாளிகளின் ரேகையுடன் ஒத்துப் போகாததால், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் இயங்கும் மாநில அளவிலான கைரேகை பிரிவு பதிவு கூடத்திற்கு, மூன்று பேருடைய ரேகை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.