ராமேஸ்வரத்தில் பைபர் படகுகள்:கோட்டை விட்ட அதிகாரிகள்
ராமேஸ்வரத்தில் பைபர் படகுகள்:கோட்டை விட்ட அதிகாரிகள்
ADDED : ஜூலை 15, 2011 04:26 AM
ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் பைபர் படகுகள் பயன்படுத்தி மீன் பிடித்தவர்களை, அதிகாரிகள் கோட்டை விட்டனர்.ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் நாட்டுப்படகுகளில் 'லம்பாடி' இன்ஜின் பொருத்தி மீன் பிடித்து வருகின்றனர்.
பைபர் படகுகள் மூலம் தூண்டில் முறையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேரளா பகுதிகளில் மீன் பிடிக்கப்படுகிறது. படகின் வேகம் அதிகம் என்பதாலும், அகதிகள் இதன் மூலம் இலங்கைக்கும், இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கும் வர வாய்ப்பு உள்ளதால், இத்தகைய படகுக்கு ராமேஸ்வரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் ஓலைக்குடா, சங்குமால் பகுதியில் பைபர் படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ரோந்து போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த பின்பு, போலீசார் அதை தேட தொடங்கினர். ஆனால் படகுகள் மாயமாகி விட்டன. இதையடுத்து போலீசார் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் விசாரித்தனர். பைபர் படகுகள் வந்தால் தகவல் தெரிவிக்குமாறு மொபைல் போன் எண்களை கொடுத்துள்ளனர்.