பொய் வழக்கால் தி.மு.க.,வை அழிக்க முடியாது : எம்.பி.,
பொய் வழக்கால் தி.மு.க.,வை அழிக்க முடியாது : எம்.பி.,
ADDED : ஜூலை 25, 2011 08:18 PM
சேலம்:''பொய் வழக்குகள் மூலம், தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் அழித்து விட யாராலும் முடியாது,'' என, ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம் தெரிவித்தார்.சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் சரண் அடைய வந்த மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் வந்த ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வை அழித்து ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தில், அரசு செயல்பட்டு வருகிறது.
ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதா, தி.மு.க.,வை, அழிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருவது நிச்சயம் நடக்காது.சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்யும் நோக்கில் போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை சந்திக்க தயார். குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட உண்மையில்லை. தூண்டுதலின் பெயரில் வேண்டும் என்றே வழக்கு போடப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளால், தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் அடக்கி அழித்து விட முடியாது. நேற்று முன்தினம், தி.மு.க., பொதுக்குழுவிலும் தலைவர் கருணாநிதி இதைத் தான் தெரிவித்துள்ளார்.தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் அழித்து விட ஒரு ஜெயலலிதா அல்ல ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.