ADDED : செப் 06, 2011 02:30 AM

சென்னை:''மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.
நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் மாறும்,'' என்று, முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய தொழில் வர்த்தக சபைகள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தைத் துவக்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:தமிழகம் எதிர்காலத்தை மிகவும் நம்பிக்கையுடன் நோக்குகிறது. மிகப் பெரிய வளர்ச்சி விகிதத்தை அடைய, உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களை வெற்றிகரமாக சந்திக்கும் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது.
சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல, முன்பை விட தமிழகம் சிறப்பான நிலையில் உள்ளது.தமிழகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. எனவே, வரும் காலங்களில், இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாறும் வகையில், முக்கிய மாற்றங்கள் ஏற்படும். மத்திய திட்டக் குழு, 12வது ஐந்தாண்டுத் திட்ட எதிர்பார்ப்பு அறிக்கையில், 9 முதல் 9.5 சதவீத வளர்ச்சி விகிதத்தை இலக்காக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது. இதில், வேளாண் துறை 4 சதவீத அளவிலும், தொழில்துறை 11 முதல் 12 சதவீத அளவிலும் வளர்ச்சி இருக்கும்.இவ்விஷயத்தில், தமிழகம் முன்மாதிரியாகத் திகழ உள்ளது. தமிழக அரசு, தேசிய வளர்ச்சி விகித சராசரியைத் தாண்டி, மற்ற மாநிலங்களை விட மிக வேகமாக வளரும். 2005-06ல் எனது அரசு, ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமாக 13.3 சதவீதம் அடைந்தது. உற்பத்தித் துறை 14.6 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.
ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்தது. மீண்டும் இரட்டை இலக்கில் வளர்ச்சி விகிதத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.முதலீடு என்பது, எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளின் அடிப்படையில் வைக்கப்படும் நம்பிக்கையைப் பொறுத்து உள்ளது. தமிழகம் மீதான எந்த நியாயமான எதிர்பார்ப்பும், ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். அப்படியென்றால், வழியில் மேடு பள்ளங்கள் இருக்காது என்று அர்த்தமல்ல. சவால்கள், தடைகள் வழியில் உள்ளன. பரஸ்பர விட்டுக் கொடுத்தல் வேண்டும்.மக்களிடம், குறிப்பாக தொழில் துறையின் முன் உள்ள பல்வேறு பிரச்னைகளை அறிவேன். இந்த அரசு சம்மதிக்கக்கூடிய, பங்குபெறக் கூடிய அரசு. வறுமை தான் மிகப் பெரிய சவால். எனவே, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, நாம் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.உள்கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லாதது, நமது செயல்பாட்டுக்கு மிகப் பெரிய தடையாகும். அதை எதிர்கொள்ள உறுதியாக உள்ளோம். நமது உள்கட்டமைப்பு வசதிகள், பெருளாதார வசதிக்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை. எனவே, மின்சாரம், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகள் தேவைப்படுகின்றன.
தமிழகத்தை நாட்டின் சிறந்த மாநிலமாக மாற்ற, 'தொலைநோக்கு பார்வை 2025' என்ற திட்டத்தை விரைவில் வெளியிட உள்ளோம். இந்த எனது கனவை நனவாக்க, பல்வேறு புதுமையான கொள்கைகளை எனது அரசு கொண்டு வர உள்ளது. இரண்டாவது பசுமைப் புரட்சியை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது.
தமிழகத்தில் திறன் வாய்ந்த மனித சக்தியில் பற்றாக்குறையே இருக்காது. மின்வெட்டு காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் பதட்டத்தில் உள்ளதை அறிவேன். விரைவில், தமிழகம் உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மீண்டும் மாற்றப்படும். வரும் 2012 இறுதியில், 4,640 மெகாவாட் கூடுதல் மின்சார திறன் பெறும்.
தமிழக அரசு விரைவில், 'புதிய தொழில் கொள்கை 2011' வெளியிட உள்ளது. இதுதவிர, ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரிபாகங்கள், பயோ டெக்னாலஜி, பார்மசி போன்ற துறைகளுக்கென குறிப்பிட்ட கொள்கைகளை வகுக்க உள்ளது. எனவே, அதிக வளம் கொண்ட வாய்ப்புகள் நிறைந்த தமிழகத்தில், முதலீடு செய்ய வரவேற்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

