ADDED : செப் 11, 2011 12:58 AM

சென்னை:மரபுகளை மதிக்காமல், மாநகராட்சி வளர்ச்சித் திட்டங்களைத் திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை மாநகராட்சி மூலம், 31 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில், ரங்கராஜபுரம் மேம்பாலம், மகப்பேறு மருத்துவமனை, பூங்காக்கள், நவீன உடற்பயிற்சிக் கூடங்கள், சத்துணவுக் கூடங்கள், பல்நோக்குக் கட்டடம் மற்றும் கலையரங்கம் என, 26 வளர்ச்சிப் பணிகள் கட்டி முடிக்கப்பட்டிருந்தன.இவற்றை, கடந்த 7ம் தேதி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தவாறே, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்திருக்கிறார்.
திறப்பு விழாவின் போது, தமிழக அரசின் உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்கள் மட்டுமே இருந்தனர். கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட, எந்த வளர்ச்சிப் பணியினைத் திறந்து வைக்கிற நிகழ்வாக இருந்தாலும், அதில், அந்தத் தொகுதியின் எம்.பி., எம்.எல்.ஏ., மேயர், துணை மேயர், ஆளும் கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், நிலைக்குழுத் தலைவர்கள், வார்டு குழுத் தலைவர்கள், அந்தந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்கிற நிலை இருந்தது.எம்.எல்.ஏ., எம்.பி., எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர்கள் வருகிறார்களோ இல்லையோ, அவர்களுக்கு முறையான அழைப்பு அனுப்பி, அவர்களுடைய பெயர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பெயர்களும் அழைப்பிதழ்களிலும், கல்வெட்டுகளிலும் முறையாக இடம் பெற்றிருக்கும்.ஆனால், மேற்கண்ட யாருக்கும் அழைப்பும் அனுப்பாமல், யாருடைய பெயரும் கல்வெட்டில் இடம்பெறாமலும், முதல்வர் ஜெயலலிதா வேண்டா வெறுப்பாக திறந்து வைத்தார். முதல்வர் திறந்து வைத்தார் என்று, அவருடைய பெயர் மட்டும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.கடந்த தி.மு.க., ஆட்சியில், இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களைத் திறந்து வைக்கின்ற நிகழ்வுகளில், கட்சிப் பாகுபாடின்றி, அனைத்து உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளும், எம்.எல்.ஏ., எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர்.அத்தகைய ஜனநாயக முறை என்பது, இப்போது அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல், மரபுகளை மீறிக் கொண்டிருக்கும் தன்மையினை, மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.இவ்வாறு, மாநகர மேயர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.