போலி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு "செக்' :தொண்டு நிறுவனங்கள் பெயரில் மோசடி
போலி உண்டு உறைவிட பள்ளிகளுக்கு "செக்' :தொண்டு நிறுவனங்கள் பெயரில் மோசடி
ADDED : செப் 10, 2011 01:27 AM
ராமநாதபுரம் :போலி உண்டு உறைவிட பள்ளிகளில் நடக்கும் மோசடியை ஆய்வு செய்து பள்ளியின் உரிமம் ரத்து செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆறு முதல் 14 வயது வரை பள்ளி செல்லா குழந்தைகளுக்காக உண்டு, உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த பள்ளிகளை பெரும்பாலும் தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. ஒரு பள்ளியில் 30 குழந்தைகளுக்காக, ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்காக கிராமங்களில் போலி உண்டு, உறைவிட பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சில மாணவர்களின் பெயர்களை வருகை பதிவேட்டில் பதிந்து, அதிகாரிகள் ஆய்வுக்கு காண்பிக்கின்றனர். தற்போது உண்டு உறைவிட பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, போலி பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்து வருகின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் தங்கி கல்வி பயில வேண்டும். பல இடங்களில் மாலை வரை மட்டும் மாணவர்களை வைத்துள்ளனர். சில இடங்களில் அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உண்டு உறைவிட பள்ளியில் படிப்பதாக கணக்கு காண்பிக்கின்றனர். இதுகுறித்து நேரடி ஆய்வு செய்து விடுதியில்லாமல் நடத்துபவர்களின் உரிமங்களை ரத்து செய்து வருகிறோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 உண்டு உறைவிட பள்ளிகள் இருந்தன. இதில் முறையான மூன்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது, என்றார்.