இரண்டாவது நில அபகரிப்பு வழக்கு: "மாஜி'யின் மகன் சிறையில் அடைப்பு
இரண்டாவது நில அபகரிப்பு வழக்கு: "மாஜி'யின் மகன் சிறையில் அடைப்பு
ADDED : செப் 23, 2011 11:01 PM
கோவை: இரண்டாவது நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரியை, கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ராஜமாணிக்கம் என்பவரின், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 11.5 ஏக்கர் நிலத்தை, தி.மு.க.,வினர் அபகரித்துக் கொண்டதாகப் புகார் எழுந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரி, மீன் கடை சிவா, பசுபதி உள்ளிட்ட ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பல்லடம் நில அபகரிப்பு வழக்கு ஒன்றில், ஏற்கனவே கைதான முன்னாள் அமைச்சரின் மகன் பாரி, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை, நேற்று சேலம் சிறையில் கைது செய்து, கோவை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.வழக்கில், கூடுதல் தகவல் பெற மூன்று நாள் கஸ்டடி விசாரணைக்கு, பாரியை அனுமதிக்க வேண்டும் என, போலீசார் மனு தாக்கல் செய்தனர். வரும் 26க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை, பாரியை கோவை மத்திய சிறையில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். பாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.