மேலும் ஒரு நில மோசடி வழக்கு"பொட்டு' சுரேஷ் ரிமாண்ட்
மேலும் ஒரு நில மோசடி வழக்கு"பொட்டு' சுரேஷ் ரிமாண்ட்
ADDED : ஜூலை 27, 2011 04:58 AM
மதுரை, ஜூமைதுரையில் மேலும் ஒரு நில மோசடி வழக்கில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் 'பொட்டு' சுரேஷ் (சுரேஷ் பாபு) நேற்று ரிமாண்ட் செய்யப்பட்டார்.மதுரை அண்ணாநகர் அமர்நாத் என்பவர், கருவேலம்பட்டியில் தனக்கு சொந்தமான 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து, அபகரித்ததாக 'பொட்டு' சுரேஷ் உட்பட ஆறு பேர் மீது போலீசாரிடம் புகார் கூறினார்.
இதில் சூடம்மணி, உதயகுமார், மாணிக்கம் செட்டியார், பாலமுருகன், ரவிக்குமார், பொட்டு சுரேஷ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணிக்கம் செட்டியார் கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கில் மதுரை முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்த, பாளை மத்திய சிறையில் ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் கைதாகி இருக்கும் 'பொட்டு' சுரேஷ் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். வழக்கு மதியம் ஒரு மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.'பொட்டு' சுரேஷ் வக்கீல் இளங்கோ வாதிடுகையில், ''வழக்குப்பதிவு செய்து 24 மணி நேரத்திற்குள் குற்றம் சுமத்தப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், 24 மணி நேரம் கடந்து விட்டது. ஆஜர்படுத்த போலீசார் தவறிவிட்டனர். வழக்குப்பதிவு குறித்து கோர்ட்டிலும், குற்றம் சுமத்தப்பட்டவரிடமும் போலீசார் தெரிவிக்கவில்லை. இவ்வழக்கு போலீசாரால் பொய்யாக ஜோடிக்கப்பட்டது. இதை விசாரணைக்கு ஏற்று கொள்ளக்கூடாது,'' என்றார்.அரசு உதவி வக்கீல் ஆனந்தி வாதிடுகையில், ''புகாரின் தன்மையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல. போலீசாரின் பயண நேரத்தை கணக்கிடும்போது காலம் தவறவில்லை. மனுதாரருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்,'' என்றார்.பின், மாஜிஸ்திரேட் முத்துக்குமரன், ''406(நம்பிக்கை மோசடி), 120 (பி)(கூட்டுசதி), 420(மோசடி) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. 323 (காயம் விளைவித்தல்)மற்றும் 3 (1) தமிழ்நாடு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைத்தல் தடுப்புச்சட்டம் கீழ் சுரேஷை ஆக.,9 வரை ரிமாண்ட் செய்ய உத்தரவிடுகிறேன்,'' என்றார்.