ADDED : செப் 05, 2011 07:16 PM
கோவை:வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி, கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள 'செக்கு'க்கு மரியாதை செலுத்தப்பட்டது.சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், செக்கு இழுக்கும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்ததும், வ.உ.சி., நினைவாக, அவர் இழுத்த செக்கு, சிறை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆண்டு தோறும், சிதம்பரனாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில், இந்த செக்குக்கு மரியாதை செய்யப்படுகிறது. வ.உ.சி.,யின் பிறந்த நாளையொட்டி, கோவை சிறை வளாகத்தில் பாதுகாப்பில் உள்ள செக்குக்கு, மரியாதை செலுத்தப்பட்டது. சிறை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மனித உரிமை பாதுகாப்புக்குழு மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக அமைப்பினர் பங்கேற்றனர்.

