தமிழ் தீவிரவாதிகள் ஊடுருவலைதடுக்க சிறுமலையில் கண்காணிப்பு:70 அடி உயரத்தில் கோபுரம்
தமிழ் தீவிரவாதிகள் ஊடுருவலைதடுக்க சிறுமலையில் கண்காணிப்பு:70 அடி உயரத்தில் கோபுரம்
ADDED : ஜூலை 15, 2011 12:48 AM
சிறுமலை:திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில், தமிழ் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க, 70 அடி உயரத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படவுள்ளது.சிறுமலையில் அடர்ந்த வனப்பகுதியில் பயிற்சி தளம் அமைக்க, தமிழ் தீவிரவாதிகள் முயன்று வருவதாக தெரிய வந்துள்ளது. இவர்களது நடமாட்டத்தை ஒழிக்க, வனத்துறை - போலீஸ் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கண்காணிப்பு கோபுரம்:சிறுமலை மலைப்பாதையின் எட்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இரவில் வனத்துறையினர், வனப்பகுதிகளை கண்காணிக்கின்றனர். எனினும், சிறுமலையை முழுமையாக கண்காணிக்க இயலவில்லை.சிறுமலையை முழுமையாக கண்காணிக்கும் பொருட்டு, வனத்தின் மையப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது.
கட்டடத்தின் மீது, 70 அடி உயரத்தில் இரும்பு கோபுரம் அமைக்கப்படுகிறது.பாதுகாப்பான கட்டடம்:கண்காணிப்பு கோபுரத்திற்கு, சூரிய ஒளி மூலம் மின் தேவை பூர்த்தி செய்யப்படும். கட்டடத்திற்குள் வனவிலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக, 10 அடி அகலம், 10 அடி நீளத்தில் குழி தோண்டப்படும். நடைபாலம் வழியாக கட்டடத்திற்குள் செல்லலாம். பின், நடைபாலத்தை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள முடியும்.இரவு முழுவதும் ஆயுதம் தாங்கிய வனக்காவலர்கள் 10 பேர், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இரவில் வனப்பகுதிக்குள் டார்ச் லைட் வெளிச்சம் அல்லது தீப்பந்தம் போன்றவை தென்பட்டால், அதை துல்லியமாகக் கணிக்க அதிநவீன தொலைநோக்கி, வனக்காவலர்களுக்கு வழங்கப்படும்.தமிழ் தீவிரவாதிகள் குறித்து வனத்துறைக்கு தெரியப்படுத்தும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு பரிசு வழங்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.