த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்காக 1 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்காக 1 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
ADDED : ஆக 15, 2026 11:10 PM

சேலம்: சேலம் அழகிரிநாதர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தை தொடங்கி வைக்க, சேலம் வடக்கு தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சிவகுமார் வருகைக்காக, 1 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், பசியுடன் காத்திருந்து பக்தர்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
நாட்டின், 80வது சுதந்திர தினத்தை ஒட்டி, அறநிலையத்துறை சார்பில், முக்கிய கோவில்களில் சமபந்தி விருந்து அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நேற்று மதியம், 12:00 மணிக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சரியாக, 12:00 மணிக்கு, வாழை இலைகள் போடப்பட்டு, தண்ணீர் தெளித்து காய்கறி, போண்டா, பாயசம் பரிமாறப்பட்டு, பக்தர்கள் தயாராக வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
விருந்தை தொடங்கி வைக்க, த.வெ.க.,வின் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., சிவகுமார் வருவார் என, அறநிலையத்துறையினர், அறங்காவலர்கள் காத்திருந்தனர். ஆனால், 1 மணி நேரம் தாமதமாக, தொண்டர்கள் புடைசூழ கோவிலுக்கு வந்த சிவகுமார், நேராக சுவாமி தரிசனம் செய்ய சென்றார். 10 நிமிடம் கழித்து, விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தார்.
அந்த நேரத்தில் பொறுமை இழந்த பக்தர்கள், இடம் பிடிக்க ஓடியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பந்தியில் ஒரு வரிசை பக்தர்களுக்கு, உணவு பரிமாறுவது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு, அடுத்த கோவிலுக்கு எம்.எல்.ஏ., சென்றார். ஆனால், எம்.எல்.ஏ., வருகைக்காக பசியுடன் ஒரு மணி நேரம் பக்தர்கள் காக்க வைக்கப்பட்டது, பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.
