UPDATED : ஆக 28, 2011 06:41 PM
ADDED : ஜூலை 24, 2011 12:09 AM

பிரதமர் அலுவலகம் மிகவும் சக்தி வாய்ந்தது.
இங்கு ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., என, 55 அதிகாரிகள் பணிபுரிகின்றனர். பிரதமரின் தலைமைச் செயலராக இருப்பவர் நாயர். பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர். தற்போது பிரதமரின் செயலராக உள்ள பிரசாத், சர்வதேச நிதி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருடைய இடத்தில் புலோக் சட்டர்ஜி என்பவர் வருகிறார்.இந்த புலோக் சட்டர்ஜி,சோனியா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அவருக்கு செயலராக இருந்தவர். அவருக்கு நெருக்கமானவரும் கூட. 'பிரதமர் மற்றும் சோனியாவுக்கு, இந்த அதிகாரி பாலமாக பணியாற்றுவார்' என, அதிகாரிகள் வட்டாரங்களில் கூறுகின்றனர். ஏற்கனவே பிரதமருக்கும், சோனியாவிற்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய உள்ளன. சட்டர்ஜி இதைக் குறைத்து வைப்பார் என்கின்றனர்.இதைத் தவிர, வேறு சில அதிகாரிகளும் மாற்றப்படுகின்றனர். பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுக்க, பிரதமர் விரும்பினார். அதன் விளைவு தான் நிறைய மாற்றங்கள்.ஆனால், இந்த மாற்றத்தால் ஒரு தமிழக அதிகாரிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள, ஐ.எம்.எப்., அமைப்புக்கு இந்த தமிழக அதிகாரியை நியமிக்க, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விருப்பப்பட்டார்.ஐ.எம்.எப்.,ல் பணியாற்றினால், நல்ல சம்பளம்; அத்தோடு, வருமான வரி விதிவிலக்கும் உண்டு. ஆனால், பிரதமர் அவருடைய செயலர் பிரசாத்தை நியமித்துவிட்டார். இதனால், தமிழகத்தைச் சார்ந்த, அந்த சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நொந்து போயுள்ளார்.
மத்திய அரசை கலங்கடிக்கும்உ.பி., தேர்தல்
அடுத்த மே மாதத்திற்கு முன், உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல்களை நடத்தியாக வேண்டும். இதற்கான வேலைகளை, தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது. உ.பி., தேர்தல் முடிவுகள் மத்திய அரசில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.எப்படியாவது உ.பி.,யில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என, காங்கிரஸ் பல முயற்சிகளில் இறங்கியுள்ளது. கிராமங்களில், ராகுல் பாத யாத்திரை நடத்தி வருகிறார். அதே போல, பா.ஜ.,வும் திட்டங்களை வகுத்து, உ.பி.,யை கைப்பிடிக்க தயார் நிலையில் உள்ளது. முதல்வராக உள்ள மாயாவதியோ, ஆட்சியை மீண்டும் கைப்பற்ற, பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.உ.பி., தேர்தலில் காங்கிரஸ் நல்ல வெற்றியை பெற்றால், ராகுல் நிலை உயரும். அதாவது, அவர் பிரதமராவதற்கு வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர, ஜனாதிபதி தேர்தலும், அதே நேரத்தில் தான் வருகிறது. காங்கிரசின் வேட்பாளர், ஜனாதிபதி ஆவதற்கு உ.பி.,யிலிருந்து ஆதரவு தேவை. எனவே, உ.பி., தேர்தல் காங்கிரசிலும், மத்திய அரசிலும் பெரும் மாறுதலை ஏற்படுத்தும் என,சொல்லப்படுகிறது.ஏற்கனவே உ.பி.,யில், காங்கிரஸ் பரிதாப நிலையில் உள்ளது. அத்தோடு ராகுல் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம், இதுவரை தோல்வி தான். அப்படியிருக்க, உ.பி.,யில் என்ன பெரிதாக சாதித்துவிடப் போகிறார் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
அ.தி.மு.க.,வின்நிலை என்ன?
பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி துவங்குகிறது. மத்திய அரசுக்கு பிரச்னைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் தயராகி வருகின்றன. சென்ற முறை போல் இந்த முறையும் பார்லிமென்ட்டை நடத்த விடக்கூடாது என, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதனால், காங்கிரசும், பா.ஜ., மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகின்றன.
இதில், அ.தி.மு.க., நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள, டில்லி கட்சிகள் ஆவலோடு காத்திருக்கின்றன. அ.தி.மு.க., வின் இரண்டு சீனியர் எம்.பி.,க்கள் இரு வேறு திசைகளில் செயல்படுகின்றனர். ஒருவர் காங்கிரசோடு இணைந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறார். இதனால், வரும் 2014 பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரசோடு கூட்டணி அமைக்கலாம் என, அவர் ஆசைப்படுகிறார்.
இன்னொரு எம்.பி.,யோ, பா.ஜ., வோடு கூட்டணி அமைப்பது நல்லது என காய் நகர்த்தி வருகிறார். காங்கிரசை ஏற்கனவே ஜெ., எதிர்த்து வருகிறார். சிதம்பரத்திற்கு எதிராக, கடுமையாக பேசியதோடு, அவர் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார். அப்படியிருக்க, எப்படி காங்கிரசோடு சேர்வது என்பது, இந்த எம்.பி.,யின் வாதம். ஆனால், கடைசியில் நிறைவேறப்போவது என்னவோ ஜெ.,யின் விருப்பம் தான்!
தெலுங்கானா குழப்பத்தில்மத்திய அரசு'சும்மா இருந்த சங்கை, ஊதிக்கெடுத்தான்' என்பர். அது, தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசுக்கு பொருந்தும். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவின், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்த, 'தெலுங்கானா அமைக்கப்படும்' என, மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், இப்போது அந்த பிரச்னையிலிருந்து மீள முடியாமல் தவிப்பதோடு, மத்திய அரசுக்கே ஆபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரசின், 10 எம்.பி.,க்கள், சபாநாயகரிடம் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துவிட்டனர். விரைவில், இவை ஏற்கப்படும் என்று சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பார்லிமென்டில், காங்கிரசின் எண்ணிக்கை, 10 குறைந்தால் பெரும் பிரச்னை. எனவே, 'உடனே ராஜினாமாவை வாபஸ் வாங்குங்கள். அதற்கு பின்தான் உங்களோடு பேச்சு' என, காங்கிரஸ் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. மேலும், 'வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், தெலுங்கானா குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆகவே, ராஜினாமா செய்ய வேண்டாம்' என, காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.ஆனால், இதுவரை எம்.பி.க்கள் அதற்கு மசியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல், திண்டாடிக் கொண்டிருக் கின்றனர் சீனியர் காங்கிரசார்.