ADDED : ஆக 06, 2011 02:47 AM
சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தந்திரியாக பணியாற்றி வரும் கண்டரரு ராஜீவரரு, பதவிக்காலம் முடிந்து நேற்று மலை இறங்கினார். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில். இக்கோவிலின் புதிய தந்திரியாக, சமீபத்தில் சதாபிஷேகம் கொண்டாடிய கண்டரரு மகேஸ்வரரு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. நிறபுத்தரி உற்சவத்திற்காக சபரிமலை நடை, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.தற்போதைய தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையைத் திறந்தார். நேற்று அதிகாலை நிறபுத்தரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து சகஸ்ர கலாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன. இவற்றை, தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமை தாங்கி நடத்தினார்.
உற்சவம் முடிந்து இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தந்திரியாக பணியாற்றி வரும் கண்டரரு ராஜீவரரு பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அவர், நேற்று மலையில் இருந்து கீழே இறங்கினார். புதிய தந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்டரரு மகேஸ்வரரு, வரும் 16ம் தேதி சபரிமலைக்குச் சென்று பொறுப்பேற்பார். புதிய தந்திரியாக பொறுப்பேற்றதும், அவர் ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடையை அன்று மாலை 5.30 மணிக்குத் திறப்பார். ஆவணி மாத பூஜைகளின் சிறப்பாக, லட்சார்ச்சனையோடு புதிய தந்திரியின் பணிகள் துவங்கும். ஆவணி மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து, வரும் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்