ADDED : செப் 21, 2011 11:17 PM

கோவை:நில மோசடி வழக்கில் முன் ஜாமின் பெற்ற தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி, ஐகோர்ட் உத்தரவுப்படி, பல்லடம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகாமல், தலைமறைவாக உள்ளார்.
மற்றொரு வழக்கிலும், முன்ஜாமின் பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதை முறியடித்து, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை, போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:முன்னாள் அமைச்சர் பழனிச்சாமியின், மொபைல் போன் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவரது இருப்பிடத்தைக் கண்டறிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அவர், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.இரண்டாவது வழக்கில் அவருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுக்கும் பட்சத்தில், அவர் பல்லடம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராவதைத் தவிர, வேறு வழியிருக்காது. அவ்வாறான சூழல் ஏற்படும் போது கைது செய்யப்படும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கு:திருப்பூர், முருங்கப்பாளையம், தெற்கு திரு.வி.க., நகரைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், 36; இவரது நிலத்தை வாங்குவதில் செல்லாத காசோலைகளைக் கொடுத்து 1.69 கோடி ரூபாய் ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பழனிச்சாமி, அவரது மகன் பைந்தமிழ் பாரி, முன்னாள் எம்.எல்.ஏ., மணி, அவரது மகன் வெங்கடேஸ்வரன், குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பாலன், பூபதி உள்ளிட்டோர் மீது, அவினாசிபாளையம் போலீசார், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில், மணி, பைந்தமிழ் பாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்; மற்றவர்கள் தலைமறைவாகினர்.
இவர்களில் முன்னாள் அமைச்சர் பழனிச்சாமிக்கு முன்ஜாமின் வழங்கிய சென்னை ஐகோர்ட், பல்லடம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகுமாறு, கடந்த மாதம் 30ம் தேதி உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 15 நாட்களாகியும் பழனிச்சாமி, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகவே உள்ளார்.இவர் மீது இன்னொரு வழக்கும் உள்ளதால், அதற்கு முன்ஜாமின் பெற, அவர் முயற்சிப்பதாக போலீசார் கூறுகின்றனர்.திருப்பூர் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறுகையில், 'முந்தைய வழக்கிலேயே ஐகோர்ட் உத்தரவை மீறிய பழனிச்சாமிக்கு, இரண்டாவது வழக்கில் முன்ஜாமின் அளிக்கக் கூடாதென, போலீஸ் தரப்பில் கோர்ட்டில் எடுத்துரைக்கப்படும்' என்றார்.
தி.மு.க.,வினர் 'அப்செட்':உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை, அ.தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில், கோவை புறநகர் மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான பழனிச்சாமி, நில மோசடி வழக்கில் கைதாவதை தவிர்த்து தலைமறைவாக உள்ளார். அவரது மகன் பைந்தமிழ் பாரியும், நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.
மாநகர் மாவட்ட தி.மு.க., செயலர் வீரகோபாலும், நில அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இதனால், உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு பெறுதல், போட்டியாளர்களை தேர்வு செய்தல், பிரசாரத்துக்கு வியூகம் வகுத்தல் உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ள வழியின்றி கட்சி நிர்வாகிகள், 'அப்செட்' ஆகியுள்ளனர்.
கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தேர்தல் பணிகளில் கட்சியின் மாநகர, மாவட்டத் தலைவர்களின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது. இவர்களை தவிர்த்து விட்டு, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது சற்று சவாலானது' என்றார்.