காஸ் சிலிண்டர் பெற 21 நாள் இடைவெளியா:எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
காஸ் சிலிண்டர் பெற 21 நாள் இடைவெளியா:எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : செப் 22, 2011 12:14 AM

சென்னை:காஸ் சிலிண்டர் பெற 21 நாட்கள் இடைவெளி தேவை என டீலர்கள் கூறுவதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கோவையில் உள்ள கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் லோகு என்பவர் தாக்கல் செய்த மனு:இரண்டு சிலிண்டர் இணைப்புக்கு 8,000 ரூபாய், ஒரு சிலிண்டருக்கு 4,500 ரூபாய் என கட்டணம் விதிக்கப்படுகிறது. சிலிண்டர் இணைப்பு பெறும் போது, காஸ் அடுப்பு மற்றும் இதர பொருட்களை வாங்க வேண்டும் என டீலர்கள் வற்புறுத்துகின்றனர்.
ஒரு சிலிண்டர் உபயோகித்து முடிந்த பின், அடுத்த சிலிண்டர் பெற 21 நாட்கள் இடைவெளி வேண்டும் என கூறுகின்றனர். இதற்கு எந்த சட்டமும் இல்லை. ஆனால், இந்த நடைமுறையை டீலர்கள் பின்பற்றுகின்றனர்.வீடுகள் 20 கி.மீ., தூரத்துக்குள் இருந்தால், சிலிண்டர் டெலிவரியை இலவசமாக செய்ய வேண்டும். 20 கி.மீ., தூரத்துக்கும் அதிகம் இருந்தால், அதற்கான கட்டணத்தை மாவட்ட கலெக்டர் நிர்ணயிக்க வேண்டும். டெலிவரி கட்டணத்தை நிர்ணயிக்க கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது.காஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள், அறிவிப்பு பலகையில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும். சிலிண்டர் வினியோகம், வாடிக்கையாளர்களின் பதிவு எண்கள், புகார் தெரிவிப்பதற்கான எண்கள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை டீலர்கள் பின்பற்றுவதில்லை.
இது தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பிய மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.