அடுத்தடுத்து குண்டர் சட்டம்: "கிலி'யில் தி.மு.க., நிர்வாகிகள்
அடுத்தடுத்து குண்டர் சட்டம்: "கிலி'யில் தி.மு.க., நிர்வாகிகள்
ADDED : செப் 17, 2011 10:54 PM
மதுரை: மதுரையில் அடுத்தடுத்து தி.மு.க.,வினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதால், தனித்து போட்டியிட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற கலக்கத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
ஆட்சி மாற்றத்திற்கு பின், நிலஅபகரிப்பு, இட ஆக்கிரமிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தி.மு.க.,வினர் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
கடந்தாட்சியில் மதுரையில் அதிகாரமிக்கவர்களாக வலம் வந்த செயற்குழு உறுப்பினர்கள் பொட்டு சுரேஷ், எஸ்ஸார் கோபி, அவரது தம்பி ஈஸ்வரன், அட்டாக் பாண்டி, பகுதி செயலராக இருந்து அதிகாரம் செய்து வந்த மூன்றாம் பகுதி செயலர் ஒச்சுப்பாலு, இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி மற்றும் மின்னல்கொடி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, 65, வயது காரணமாக குண்டர் சட்டத்தில் இருந்து தப்பித்தார். எட்டு பேர் இதுவரை குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, குருசாமி மீதான குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிடும் என்று தலைமை அறிவித்துள்ளது, அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை வழிநடத்திச் செல்லக்கூடிய முக்கிய 'தலைகள்' எல்லாம் சிறையில் இருப்பதாலும், தங்களிடம் அதிகாரம் இல்லாத நிலையிலும், தேர்தல் 'பிரசாரம்' செய்து எப்படி வெற்றி பெற முடியும்? என்று தி.மு.க.,வினர் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, ஜாமினில் வெளிவரும் தி.மு.க.,வினரை மீண்டும் கைது செய்தால், அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும்படி கட்சித் தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். தேர்தல் நேரத்தில் இது சர்ச்சையை கிளப்பி, அது தி.மு.க.,வினருக்கு சாதகமாகக்கூட மாற வாய்ப்புண்டு என, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் ஜாமினில் வெளிவருவதற்கு முன்பே, சிறையிலேயே அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்படுவது தொடர்கிறது.