மரபணு சோதனைக்கு உட்பட மறுப்பதால்"31 வயது ரோகித்துக்கு திவாரிதான் தந்தை': ஐகோர்ட்
மரபணு சோதனைக்கு உட்பட மறுப்பதால்"31 வயது ரோகித்துக்கு திவாரிதான் தந்தை': ஐகோர்ட்
ADDED : செப் 24, 2011 12:02 AM

புதுடில்லி: 'உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி, தொடர்ந்து மரபணு சோதனைக்கு உட்பட மறுப்பதால், 31 வயது ரோகித்துக்கு அவர் தான் தந்தை என, கருதப்படும்' என்று டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.உத்தரகண்ட் முதல்வர், உ.பி.,முதல்வர், ஆந்திர கவர்னர், மத்திய அமைச்சர் என, பல பொறுப்புகளை வகித்தவர் என்.டி.திவாரி, 85.
30 ஆண்டுகளுக்கு முன், இவர் வீட்டில் வேலை செய்த உஜ்வாலா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால், தான் பிறந்ததாக ரோகித் சேகர், 31. என்பவர் கோர்ட்டில் மனு செய்திருந்தார். 'தன்னுடைய தந்தை திவாரி' என, அறிவிக்கும் படி அவர் கோரியிருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
'அந்த இளைஞருக்கு தான் தந்தையல்ல' என, திவாரியும் மறுத்தார்.ஆந்திர கவர்னராக திவாரி பதவி வகித்த போது, ராஜ்பவனில் பல பெண்களுடன் படுக்கை அறையில் இருந்த காட்சி 'டிவி'க்களில் வெளியானது. இதனால், அவர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரோகித் சேகர் மீண்டும் டில்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். 'தன்னுடைய தந்தையாக திவாரியை அறிவிக்க செய்ய வேண்டும்' என, மனுவில் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட், திவாரிக்கு மரபணு பரிசோதனை செய்யும் படி உத்தரவிட்டது. ஆனால், இந்தச் சோதனைக்கு உட்பட திவாரி மறுத்தார். 'இந்த சோதனையை செய்து கொள்ளும் படி யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது' என, டில்லி ஐகோர்ட் பதிவாளருக்கு கடிதம் அனுப்பினார்.
கோர்ட் வளாகத்திலேயே அவருக்கு மரபணு சோதனைக்கான ரத்தம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய தினம், அவர் கோர்ட்டுக்கு வராமல் புறக்கணித்தார்.இதனால், ரோகித் சேகர் மனு விஷயத்தில் கோர்ட் ஒரு முடிவுக்கு வராமல் சங்கடப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த, நீதிபதி கீதா மித்தல் குறிப்பிடுகையில், 'திவாரிக்கு கட்டாய மரபணு பரிசோதனை நடத்தப்படவில்லை. அவராகவே முன்வந்து ரத்த பரிசோதனை செய்ய பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டும், அவர் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார். அவரது இந்த நிராகரிப்பு, ரோகித் தான் அவரது மகன் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது' என்றார்.