அங்கீகார சான்றுக்கு ரூ. 5,000 லஞ்சம்உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கைது
அங்கீகார சான்றுக்கு ரூ. 5,000 லஞ்சம்உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கைது
ADDED : செப் 09, 2011 06:17 AM
சேலம்:சேலம் கல்வி மாவட்ட அலுவலகம் மற்றும் முதன்மை கல்வி மாவட்ட அலுவலகத்தில், லஞ்சம் தலை விரித்தாடுவதாக, நேற்று முன்தினம், செய்தி வெளியானது.
இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை, நேற்று முன்தினம் காலை முதல், லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்தனர்.ஒவ்வொரு நர்சரி பள்ளியும், மூன்றாண்டுக்கு ஒரு முறை, உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், பள்ளிக்கான அங்கீகார சான்றை பெற வேண்டும். சங்ககிரியில் உள்ள, பிரைட்சன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் பூங்கோதை, மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலு (எ) பாலசுப்பிரமணியனிடம் விண்ணப்பம் கொடுத்தார்.
விண்ணப்பத்தை பெற்ற பாலு, பள்ளி அங்கீகாரத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முதலில், 5,000 ரூபாய் தருவதாகவும், பின், மீதிப்பணம் தருவதாகவும், பள்ளி நிர்வாகம் கூறியது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தின் கீழ்பகுதியில், பணத்தை கொண்டு வந்து தர வேண்டுமென, பாலு
கூறினார்.
இதுகுறித்து, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், பூங்கோதை புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., மற்றும் போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்த, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலுவிடம், பூங்கோதை, 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், பாலுவை கைது
செய்தனர்.