எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு விவசாயிகள் தேர்வில் திணறல் குறுவை தொகுப்பில் இலக்கை முடிப்பதில் சிக்கல்
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு விவசாயிகள் தேர்வில் திணறல் குறுவை தொகுப்பில் இலக்கை முடிப்பதில் சிக்கல்
ADDED : ஆக 16, 2026 10:57 PM
சென்னை: குறுவை தொகுப்பு திட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., விவசாயிகளை தேர்வு செய்ய முடியாததால், இலக்கை முடிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களில், ஜூன் மாதம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். இதற்காக, சேலம், மேட்டூர் அணை அதே மாதம் 12ம்தேதி பாசனத்திற்கு திறக்கப்படும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், இதே பருவத்தில் நெல் சாகுபடிக்கு அணைகள், ஏரிகளில் இருந்து நீர் எடுக்கப்படும்.
சிறப்பு தொகுப்பு
நடப்பாண்டு, தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாலும், அண்டை மாநிலங்களில் இருந்து நீர் வராததாலும், அணைகளில் இருந்து நீர் திறக்கப்படவில்லை. எனவே, நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை, ஜூன் 12ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, டெல்டா மாவட்டத்திற்கு, 77.5 கோடி ரூபாயும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு, 57.3 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விதை நெல், நுண்ணுாட்ட கலவை, திரவ உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
திட்ட நிதியில், 80 சதவீதத்தை, பொது பிரிவு விவசாயிகளுக்கும், 19 சதவீதத்தை, ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும், ஒரு சதவீதத்தை பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
பயனாளிகள் பதிவை, 'உழவர்' செயலி வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பல மாவட்டங்களில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு விவசாயிகளை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால், திட்ட இலக்கை முடிக்க முடியாமல், வேளாண் துறையினர் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பாண்டு எஸ்.சி., - எஸ்.டி., விவசாயிகளுக்கான மானிய பங்களிப்பை, முதல்வர் விஜய் உயர்த்தி வழங்கிஉள்ளார்.
ஆனால், இதுகுறித்து பல விவசாயிகளுக்கு தெரியவில்லை. உழவர் - அலுவலர் தொடர்பு திட்டத்திற்கு, தோட்டக்கலைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிகாரம்
இதனால், எஸ்.சி., - எஸ்.டி., விவசாயிகளில், பயனாளிகள் தேர்வில், அவர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை. எனவே, ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட முடியாமல், மாவட்டங்களில் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
டெல்டா அல்லது டெல்டா அல்லாத மாவட்டங்களில், திட்ட தொகையில் சேமிப்பு இருந்தால், அதை மாற்றிக் கொள்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகளில் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதை பயன்படுத்தி, திட்ட இலக்கை முடிக்க, வேளாண் துறை செயலர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
