பெரம்பலூரில் பங்காரு அடிகளார் பக்தர்கள் சுங்கச்சாவடி பணியாளர்களுடன் மோதல்
பெரம்பலூரில் பங்காரு அடிகளார் பக்தர்கள் சுங்கச்சாவடி பணியாளர்களுடன் மோதல்
UPDATED : ஆக 13, 2011 06:29 PM
ADDED : ஆக 13, 2011 01:29 PM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் பக்தர்களுக்கும், சுங்கவரிச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
10க்கும் மேற்பட்ட வாகனங்களும், சுங்கச்சாவடி நிலையமும் சேதமடைந்தது.மதுரையில், ஆக.,14 நடைபெறவுள்ள ஆன்மீக மாநாட்டில் பங்கேற்பதற்காக பங்காரு அடிகளார் மற்றும் அவரது பாதுகாவலர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர், மேல்மருவத்தூரில் இருந்து, 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில், அவர்களது வாகனங்களுக்காக, காலை 11.30 மணியளவில் ஒருவழி திறந்துவிடப் பட்டிருந்தது.பங்காரு அடிகளார் வாகனம் சென்றதும், தொடர்ந்து பக்தர்கள் வாகனம் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், பக்தர்களும், பங்காரு அடிகளார் பாதுகாவலர்களும், 'சுங்கச்சாவடியின் அனைத்து வழிகளிலும் எங்கள் வாகனங்கள் செல்ல வேண்டும்' என வற்புறுத்தியுள்ளனர்.அதற்கு சுங்கச்சாவடி பணியாளர்கள் மறுப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பக்தர்கள், சுங்கச்சாவடி பணியாளர்களையும், சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு பகுதிகளையும் தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில், சுங்கச்சாவடி மேலாளர் மகேந்திரன் (41), பணியாளர்கள் பிரபு (27), ராஜாமுரளி (27), சிவக்குமார் (25), பிரபு (27), பெருமாள் (23), சுரேஷ் (32) உள்பட 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு நிலையம் மற்றும் அறைகள், பங்காரு அடிகளார் பக்தர்களால் சேதப்படுத்தப்பட்டது. அதேபோல, சுங்கச்சாவடி பணியாளர்கள் தாக்கியதில், 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளும், பக்தர்கள் இருவரும் காயமடந்தனர்.தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில், மங்கலமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.