ADDED : ஆக 14, 2011 02:56 PM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே அத்திகோயில் வனப்பகுதியில் உள்ள மலைவாழ்மக்கள் குடியிருப்பில் புகுந்த மர்ம நபர்கள் வீடுகளில் தாக்குதல் நடத்தி அங்குள்ளவர்களை விரட்டியடித்து சோலார் மின்விளக்கிற்காக பொருத்தப்பட்டிருந்த பிளேட்டுகளை திருடிச் சென்றனர்.
அவர்கள் நக்சலைட் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அத்திகோயில் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள பளியர்மேடு என்ற இடத்தில் மலைவாழ் இனத்தை சேர்ந்த பளியர்கள் குடியிருப்பு உள்ளது. மொத்தமுள்ள 15 வீடுகளுக்கும் சேர்த்து தெருவிளக்கிற்காக மூன்று இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு 5பேர் கொண்ட மர்ம கும்பல் சூரிக்கத்தி, அரிவாள், கடப்பாறை சகிதமாக அங்கு புகுந்தது. பூட்டிய வீடுகளை கடப்பாறையால் தாக்கியது. பதற்றத்தில் வெளியே வந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அலறியடித்துக் கொண்டு அருகே இருந்த வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். அதன்பின் மர்மகும்பல் அங்கிருந்த சோலார் லைட்டுகளுக்காக இரும்பு கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த சோலார் பிளேட்டுகளை திருடிச் சென்றது. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் விரைந்தனர். அதற்குள் அக்கும்பல் தம்பி சென்றது. மற்ற பொருட்களையெல்லாம் விட்டுவிட்டு சோலார் பிளேட்டுகளை மட்டும் திருடிச் சென்றது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நக்சலைட்டுகள், கஞ்சா பயிரிடும் சமூக விரோதிகள் தாங்களது தகவல் தொடர்பு சாதனங்களையும், டார்ச்லைட் போன்றவைகளையும் வனப்பகுதியில் இருந்தவாறே சோலார் பிளேட் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்வதற்காக இவற்றை திருடிச் சென்றிருக்கலாம் என்ற கருத்து வலுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை செய்துவருகின்றனர். கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.