ADDED : செப் 06, 2011 11:57 PM
கோவை: கின்னஸ் சாதனைக்காக, 1001 கவிஞர்கள் பங்கேற்கும், 72 மணி நேர தொடர் கவியரங்கம் நடக்க உள்ளது.
கோவை தமிழ்ச்சங்கம், கற்பகம் பல்கலைக்கழகம்,கோவை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து, தமிழ்க் கவிதையை வளர்க்கும் நோக்கத்தோடு கின்னஸ் சாதனை கவியரங்கம் நடத்த உள்ளனர். இதில், 1001 கவிஞர்கள், தொடர்ந்து 72 மணி நேரம் கவிதைகள் வாசிக்க உள்ளனர். அக்டோபர் முதல் வாரத்தில் கற்பகம் பல்கலைக்கழக அரங்கில் நடக்க இருக்கும் இந்த கவிரங்கத்தில் பங்கேற்கும் கவிஞர்களுக்கு, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கோவை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் மானூர் புகழேந்தி கூறியதாவது: தமிழ் படைப்பிலக்கியத்தில், கவிதைக்கென்று தனித்த இடமுண்டு. நம்முடைய பழம்பெரும் இலக்கியங்கள் எல்லாமே, கவிதை நடையில்தான் எழுதப்பட்டுள்ளன. கவிதைகளின் மேல் எல்லோருக்கும் ரசனையும், ஈர்ப்பும் இருந்தது. ஆனால், இன்றைக்கு காலச்சூழலும், கல்விச்சூழலும் மாறிப்போனதால், கவிதை எழுதுபவர்கள் எண்ணிக்கையும், கவிதை வாசிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. கவிஞர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள இந்த தேக்கத்தைப் போக்கி, தொடர்ந்து கவிதை எழுதும் எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக, இந்த கின்னஸ் சாதனை கவியரங்கத்தை நடத்துகிறோம். இதில், மூத்த கவிஞர்கள், இளங்கவிஞர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என அனைவரும் பங்கேற்கலாம். இவ்வாறு, புகழேந்தி கூறினார். கவியரங்கத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 28 வரிகளுக்கு மிகாமல், 3 கவிதைகள், புகைப்படம் மற்றும் சுய முகவரியிட்ட உறையுடன், இம்மாத இறுதிக்குள், தலைவர் கோவைத் தமிழ்ச் சங்கம்,63, பாரதிதாசன் நகர், ராமநாதபுரம், கோவை-45 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.