ADDED : செப் 17, 2011 11:06 PM
நாகர்கோவில் : தேசிய ஹீமோபீலியா பெடரேஷனின் தேசிய மாநாடு கன்னியாகுமரியில் தொடங்கியது.
ஹீமோபீலியா என்பது இரத்தம் உறைவதில் உள்ள குறைபாடு. இது பாரம்பரியமாக வரும் நோய் ஆகும். 1828-ம் ஆண்டு இந்த நோய் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நோய்க்கு எதிராக 1963-ம் ஆண்டு உலக ஹீமோபீலியாசங்கம் பிரேங்க் சானபெல் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அசோக்சர்மா என்பவரால் 1983-ம் ஆண்டு இந்த சங்கம் தொடங்கப் பட்டு இன்று 72 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதற்காக ஆண்டு தோறும் இந்த சங்கத்தின் தேசியக்குழு கூடி பல்வேறு முடிவுகளை எடுக்கிறது. மேலும் ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க நிக்கில் கோயல் விருதுகளும் வழங்கப்படுகிறது. இச்சங்கத்தின் இந்த ஆண்டுக்கான தேசிய செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் தொடங்கியது. சங்க தலைவர் டாக்டர் கோஸ் தலைமை வகித்தார். மாநில வனத்துறை அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார். கலெக்டர் மதுமதி நிக்கில் கோயல் விருதுகளை வழங்கினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஹமீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.