தினமும் 2,000 மெகா வாட் மின்சாரம்: காற்றாலைகள் கைகொடுப்பதால் நிம்மதி
தினமும் 2,000 மெகா வாட் மின்சாரம்: காற்றாலைகள் கைகொடுப்பதால் நிம்மதி
ADDED : மே 05, 2024 05:28 AM

சென்னை: தமிழகத்தில் சீசன் துவங்கியதால், தினமும் 2,000 மெகா வாட்டிற்கு மேல் காற்றாலை மின்சாரம் கிடைக்கிறது. இதனால், தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு சிரமம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் மே முதல் செப்., வரை காற்றாலை சீசன். இந்த கால கட்டத்தில், காற்றாலைகளில் இருந்து தினமும், 2,500 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கும். கடந்த மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், வீடுகளில், 'ஏசி' சாதன பயன்பாடு மற்றும் விவசாய மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், மின்நுகர்வு தொடர்ந்து அதிகரித்து, இம்மாதம், 2ம் தேதி, 20,830 மெகா வாட்டாக புதிய உச்சத்தை எட்டியது. தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் போதவில்லை என்பதால், மின்சார சந்தையில் அதிக கொள்முதல் செய்யப்படுவதால் செலவு எகிறியுள்ளது.
இந்நிலையில் தற்போது, காற்றாலை சீசன் துவங்கியுள்ளது. காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 2,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 10,600 மெகா வாட் திறனில் காற்றாலைகளை நிறுவியுள்ளன. சீசன் காலத்தில் காற்றாலைகளில், அதிக மின்சாரம் கிடைக்கும். ஒரு யூனிட் உற்பத்தி செலவும், 3.10 ரூபாய் தான். இது, அனல் மின்சாரம், மின் கொள்முதல் போன்ற செலவுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு.
தற்போது, சீசன் துவங்கியுள்ள நிலையில் தினமும் அதிக மின்சாரம் கிடைக்கும். இதனால், மின்சார சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவது படிப்படியாக நிறுத்தப்படும். கோடை மழை பெய்தால், மின் தேவையும் குறையும். காற்றாலைகளில் அதிக அளவாக, 2023 செப்., 10ம் தேதி 5,838 மெகா வாட் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.