கப்பலில் வந்த ரூ.2.5 கோடி மதிப்பு மின்னணு பொருட்கள் பறிமுதல்
கப்பலில் வந்த ரூ.2.5 கோடி மதிப்பு மின்னணு பொருட்கள் பறிமுதல்
ADDED : செப் 09, 2011 09:46 PM

சென்னை : தகுந்த ஆவணம் இல்லாமல், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கப்பலில் வந்த, 'எல்சிடி டிவி' மற்றும், வீடியோ கேமரா உள்ளிட்ட, 2 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருட்களை, வருவாய் புலனாய்வு பிரிவினர், பறிமுதல் செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு, கப்பலில் மின்னணு பொருட்கள் கடத்தப்படுவதாக, வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், சிங்கப்பூரில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு, கடந்த 2ந் தேதி, மேட்டுத்தெரு, 'ஷா இன் இம்ப்கஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில், கன்டெய்னரில் சரக்கு வந்தது. வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள், 8ந் தேதி கன்டெய்னரை கைப்பற்றி சோதனை செய்தனர்.சோதனையில், கன்டெய்னரில் முதல் நான்கு வரிசைகளிலும் காட்டன் பட்ஸ், டூத் பிரஷ் மற்றும் அயர்ன் பாக்ஸ்கள் இருந்தன. ஆனால், அடுத்த வரிசைகளில், 'எல்சிடி டிவி' மற்றும் விலை உயர்ந்த வீடியோ கேமராக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம், 170 'எல்சிடி டிவி'க்கள், 60 விலை உயர்ந்த வீடியோ கேமராக்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு, இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய். இதுகுறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குனர் ராஜன் கூறும் போது, ''காட்டன் பட்ஸ், டூத் பிரஷ் இறக்குமதி என்ற பெயரில் விலை உயர்ந்த, 'எல்சிடி டிவி' மற்றும் வீடியோ கேமராக்கள் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்டுள்ளன. கன்டெய்னரில் குறிப்பிட்டுள்ள விலாசம் போலியானது. அப்படி ஒரு நிறுவனமே அந்த இடத்தில் இல்லை. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.