மோசடி வழக்கில் 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை: ஐகோர்ட்
மோசடி வழக்கில் 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை: ஐகோர்ட்
ADDED : செப் 23, 2011 11:08 PM
மதுரை: குமரி மாவட்டம் பழவிளை நாடார் மகாஜன சங்கம் காமராஜ் பாலிடெக்னிக்கில் நடந்த மோசடி குறித்த வழக்கை நாகர்கோவிலுக்கு மாற்றி, மூன்று மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பழவிளை நாடார் மகாஜன சங்கம் காமராஜ் பாலிடெக்னிக் செயலாளர் தர்மலிங்கம் தாக்கல் செய்த மனு: இந்த பாலிடெக்னிக்கில் 2009ல் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில் செயலாளராக கரிக்கோல்ராஜ், பொருளாளராக சந்திரமோகன் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் கல்லூரி கட்டட நிதி போன்றவைகளை வசூலித்து, பாலிடெக்னிக் கணக்கில் வரவு வைக்காமல், அவர்கள் பெயரிலுள்ள கணக்கில் வரவு வைத்தனர். இந்த மோசடி குறித்து நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ''மதுரை குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள வழக்கை ஒரு வாரத்திற்குள் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும். மூன்று மாதங்களுக்குள் போலீசார் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டார்.