ADDED : அக் 06, 2011 10:05 PM
சென்னை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மேலாளர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, சென்னை மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வி.எஸ்.செந்தில்குமார்; வழக்கறிஞர். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், கிரெடிட் கார்டு பெற்றிருந்தார். கிரெடிட் கார்டுக்கான தொகைக்கு, காசோலை அளித்திருந்தார்.
அந்த காசோலை, வங்கியில் இருந்து பணம் இல்லை என திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட தொகையை செலுத்தி, காசோலையை திருப்பி தருமாறு கோரினார். வங்கியிடமிருந்து, சரியான பதில் இல்லை. சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் கோர்ட்டில், செந்தில்குமார், புகார் மனு தாக்கல் செய்தார்.
விசாரித்த நுகர்வோர் கோர்ட், மன உளைச்சல் மற்றும் இழப்புக்கு நஷ்டஈடாக, 40 ஆயிரம் ரூபாயை செந்தில்குமாருக்கு வழங்க வேண்டும் என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு உத்தரவிட்டது. 2007, டிசம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
உத்தரவை அமல்படுத்தக் கோரி, நுகர்வோர் கோர்ட்டில், வழக்கறிஞர் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அம்பத்தூரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் கிரெடிட் கார்டு டிவிஷன் மேலாளர் மற்றும் மும்பையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் கிரெடிட் கார்டு இயக்க மேலாளருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.

