வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,500 : காஷ்மீர் தேர்தல் அறிக்கையில் காங்., வாக்குறுதி
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,500 : காஷ்மீர் தேர்தல் அறிக்கையில் காங்., வாக்குறுதி
ADDED : செப் 16, 2024 10:06 PM

ஸ்ரீநகர்: கிலோ ஆப்பிளுக்கு குறைபட்ச ஆதரவு விலை ரூ. 72, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3.500 உதவி தொகை என காஷ்மீர் சட்டசபை தேர்தல் அறிக்கையை காங். வெளியிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு செப். 18, செப்.25. அக்.01 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்., தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் மாநில காங். தலைவர் பவன் கேரா இன்று ஸ்ரீநகரில் கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை விவரம்:
* நிலமற்ற, குத்தகைதாரர் மற்றும் நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000 கூடுதல் நிவாரணம்.
* ரூ. 2,500 கோடியில் மாவட்ட அளவிலான நீர்ப்பாசன திட்டம் அமைக்கப்படும்.
* வேலையில்லா இளைஞர்கள் தகுதி அடிப்படையில் மாதந்தோறும் ரூ. 3,500 வழங்கப்படும்.
* ஆட்சிக்கு வந்த 30 நாட்களில் ஒரு லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
* இயற்கை பேரிடர்களுக்கு எதிரான அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு மற்றும் ஒரு கிலோ ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 72 வழங்கப்படும். என்பன உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன.
இது குறித்து காங். தலைவர் பவன் கேரா கூறியது,
10 ஆண்டுகளாக தேர்தலை சந்திக்காமல் காஷ்மீர் இதயம் காயமடைந்துள்ளது. அந்த காயங்களை குணப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் சிறுபான்மை ஆணையம் அமைக்கப்படும் என்றார்.