தர்மேந்திர பிரதான் வருகை ரத்து ஆனாலும் எதிர்ப்பு காட்ட அறைகூவல்
தர்மேந்திர பிரதான் வருகை ரத்து ஆனாலும் எதிர்ப்பு காட்ட அறைகூவல்
ADDED : பிப் 27, 2025 08:32 PM
சென்னை:மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.
சென்னை, ஐ.ஐ.டி.,யில், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்களுக்கான மாநாடு இன்று துவங்கி, மார்ச் 2ம் தேதி வரை நடக்கிறது. இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழக கல்விக்கான மத்திய ஒதுக்கீட்டு நிதியை வழங்க முடியாது' என தெரிவித்திருந்தார். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மாணவர் அமைப்புகள், மும்மொழி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தர்மேந்திர பிரதானின் வருகையை எதிர்த்து, கருப்பு கொடி காட்டப் போவதாக, காங்., - கம்யூ., கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர், 'போஸ்டர்' ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 'தர்மேந்திர பிரதானின் வருகை ரத்து செய்யப்பட்டு, அவருக்கு பதில், மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்பார்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், 'கருப்பு கொடி போராட்டம், தர்மேந்திர பிரதான் என்ற ஒற்றை நபரை கண்டிக்கும் போராட்டம் அல்ல; நிதி தர மறுத்து, ஹிந்திக்கு ஆதரவாக உள்ள தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிரானது. அதனால், இணை அமைச்சருக்கும் கருப்பு கொடி காட்டுவோம்' என, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.