UPDATED : மே 05, 2024 07:48 AM
ADDED : மே 05, 2024 07:47 AM

உடுமலை : அமராவதி அணை துார்வாரப்பட்டு, பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என, தமிழக அரசு அறிவித்து மூன்று ஆண்டாகியும் பணிகள் துவங்கவில்லை. நடப்பாண்டு அணை நீர் மட்டம் சரிந்துள்ள நிலையில், துார்வார வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, 1958ல் கட்டபட்டு, 1959ல் பயனுக்கு வந்தது. 4 டி.எம்.சி., கொள்ளளவும், ஆண்டுக்கு, 10 டி.எம்.சி., நீர் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு, ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாகவும் உள்ளது.
அணை பயனுக்கு வந்து, 65 ஆண்டுகளாக துார்வாரப்படாததால், நீர் தேங்கும் பரப்பளவில் வண்டல் மண் படிந்துள்ளது. மொத்தமுள்ள, 90 அடி உயரமுள்ள அணையில், 4,047 மில்லியன் கனஅடி நீர் தேக்க முடியும். அணையில், 20 சதவீதம் வரை, மண் பரப்பாக மாறியுள்ளது.
இதனால், அணை மொத்த கொள்ளளவில், 800 மில்லியன் கனஅடி வரை நீர் தேக்க முடியாமல், வீணாக வெளியேற்றும் நிலை உள்ளது.
பருவமழை காலத்தில் அணை நிரம்பி, பல டி.எம்.சி., நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. கோடை காலம் மற்றும் பாசன தேவைக்கு முழுமையாக நீர் வழங்க முடியாத சூழல் உள்ளது. பயிர் சாகுபடியும், பாசன காலமும் குறைந்து, பாசன நிலங்கள் தரிசாக மாறி வருகிறது.
பட்ஜெட் அறிவிப்பு
இந்நிலையில், அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை துார்வாரவும், முழு கொள்ளளவுக்கு நீர் தேக்க வேண்டும், என, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த, 2021 ஆக.,ல், தமிழக அரசு பட்ஜெட்டில், மேட்டூர், வைகை, அமராவதி உள்ளிட்ட அணைகள் துார்வாரப்பட்டு, பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டாகியும், இத்திட்டம் நடைமுறைக்கு வராமல் உள்ளது. அமராவதி பாசனம் முழுமையாக பாதிக்கப்படுவதோடு, கோடை காலங்களில் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
பாசன மண் வளமாகும்
விவசாயிகள் கூறியதாவது:
அணையை துார்வாரினால், கூடுதல் நீர் சேமிக்க முடியும். ரசாயன உரங்கள் பயன்பாட்டால், விவசாய நிலங்களில் மண் வளம் குறைந்துள்ளன. அணையின் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அனுமதியளித்தால், அணையும் ஆழமாகும்; விளை நிலங்களும் வளமாகும்.
அதேபோல், பெரும்பாலான பகுதிகளில், மணல் குவிந்துள்ளது. இவற்றால், அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
நீர் வளத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை இணைத்து, அணை துார்வாரும் பணியை துவக்க, ஒரே உத்தரவாக வெளியிட்டு, உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
அரசுக்கு அறிக்கை
அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர் தேங்கும் பரப்பில், வனத்துறைக்கு சொந்தமான நிலமும் உள்ளதால், அனுமதி பெற வேண்டும். இதற்கு, 1.5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற வனத்துறையின் பல்வேறு நிபர்ந்தனைகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, 39.67 அடி நீர் மட்டம் இருந்தாலும், அதில், 20 அடி வரை வண்டல் மண் மட்டுமே உள்ளது. நீர் மட்டம் குறைந்துள்ளதால், துார்வாருவது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம்,' என்றனர்.