முருகன் மாநாட்டு தீர்மானங்கள் வி.சி., கருத்துக்கு பா.ஜ., கண்டனம்
முருகன் மாநாட்டு தீர்மானங்கள் வி.சி., கருத்துக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : ஆக 27, 2024 02:07 AM

சென்னை: கல்வியை காவி மயமாக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் அதிர்ச்சி அளிப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் கூறியதற்கு, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
ரவிகுமார்: கல்வியை காவி மயமாக்கும் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி, அறநிலையத் துறை பள்ளிகள், கல்லுாரிகளில், மாணவ - மாணவியருக்கு போட்டி கள் நடத்தி பரிசுகள் வழங்குவது.
விழாக் காலங்களில் முருகன் கோவில்களில், மாணவ -- மாணவியரை கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது; கோவில் சார்பில் நடத்தப்படும் கல்லுாரிகளில், சிறப்பு ஆன்மிக பாடப்பிரிவுகளை ஏற்படுத்த பரிந்துரைப்பது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது, கல்வியை சமய சார்புடையதாக்குதல் என்னும் பா.ஜ., அரசின் ஹிந்துத்துவ செயல் திட்டத்தை, முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.
ஹிந்து சமய அறநிலையத் துறை, தன் துறை சார்ந்த நடவடிக்கைகளை செய்தால், அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை.
ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தை கொண்டு வந்து திணிப்பது, சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்பு சட்ட நெறிக்கு எதிரானது.
நாராயணன் திருப்பதி: மதரஸாக்களில் முஸ்லிம் மத போதனைகள்தான் கல்வியாக கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இது ரவிகுமாருக்கு தெரியுமா; அதை விமர்சிக்க தைரியம் உள்ளதா; கிறிஸ்துவத்தை பரப்புவோர் நடத்தும் பள்ளிகளில், பைபிள் குறிப்புகள் இடம்பெறுவது ரவிகுமாருக்கு தெரியுமா?
லயோலா கல்லுாரிக்குள் சர்ச் உள்ளது தெரியுமா?
கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் தங்கள் கல்லுாரிகளில், மத வழிபாடு நடத்தலாம்.
ஆனால், பெரும்பான்மை மக்கள் கல்வி கற்கும் கல்விச் சாலைகளில் இறை வழிபாடும், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் கண்டனத்துக்கு உரியதா?
கல்வியை, கலாசாரத்தை, பண்பாட்டை, நாகரிகத்தை, ஒழுக்கத்தை, நேர்மையை, நீதியைத்தான் ஹிந்து சமயம் போதிக்கிறது.
இப்படி தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுதான் கடும் கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

