சென்னை, புறநகரில் 500 இடங்களை சூழ்ந்த மழைநீர்: மருத்துவமனைகளில் வெள்ளம் தேங்கி பாதிப்பு
சென்னை, புறநகரில் 500 இடங்களை சூழ்ந்த மழைநீர்: மருத்துவமனைகளில் வெள்ளம் தேங்கி பாதிப்பு
ADDED : டிச 01, 2024 03:12 AM

சென்னை: வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயலின் தாக்கத்தால் நேற்று மாலை வரை சராசரியாக 15 செ.மீ., மழை பெய்தது. நேற்று பெய்த தொடர் கனமழையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என, 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.
எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை தரைதளத்தில் உள்ள புறநோயாளி பிரிவில் மழைநீர் புகுந்தது. மேல்தளத்தில் இருந்து, ஐந்தாவது மாடியில் உள்ள, சுக பிரசவத்திற்கு பிந்தைய வார்டுகளிலும் மழைநீர் புகுந்தது.
இதனால், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டோர் அவதிப்பட்டனர். பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த அவர்களுக்கு, உடனடியாக மாற்று வார்டு ஒதுக்கப்பட்டது.
அதேபோல், அருகே உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் மழைநீர் தேங்கியதால், இரண்டு மருத்துவமனைக்கும் வந்த நோயாளிகள், கர்ப்பிணியர், குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளில் மழைநீர் தேங்கியதால், அங்கே கட்டப்பட்டு வரும் தாய் - சேய் நல கட்டடத்திற்கு நோயாளிகள் மாற்றப்பட்டனர்.
அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலும் மழைநீர் புகுந்தது. ஆவடி, பெரவள்ளூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் போலீசார் திணறினர்.