UPDATED : ஜூலை 06, 2024 07:40 AM
ADDED : ஜூலை 05, 2024 08:13 PM

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் -ஐ கொலை செய்த கொலையாளிகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. இன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். உணவு டெலிவரி செய்வது போல் வந்து இச்சம்பவத்தை அரகேற்றியதாக தெரியவந்துள்ளது.
பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங்க், சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை அடுத்து அசம்பாவிதங்களை தடுக்க சென்னை பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் கொலையாளிகளை கைது செய்யுமாறு போராட்டம் நடத்தினர்.
இபிஎஸ் கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரையே கொலை செய்யும் நிலை தமிழகத்தில் உள்ளது. கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யப்படவேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் ஓழுங்கை என்னவென்று சொல்வது. என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.
கொலையாளிகள் சரண்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் -ஐ கொலை செய்த கொலையாளிகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். கொலையாளிகள் 8 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது என சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.