ADDED : ஜூலை 16, 2024 01:30 AM
சென்னை: சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவின் போது, அதில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை, 'ஆன்லைன்' முறையில் சரிபார்க்கும் வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பத்திரப்பதிவுக்கான அடிப்படை விபரங்கள், 'ஆன்லைன்' முறையில் உள்ளீடு செய்யப்பட வேண்டும். சொத்து உரிமையாளர், அதை வாங்குபவர், சாட்சிகள் ஆகியோரின் ஆதார் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
இதை சரிபார்க்கும் வசதி, சார் - பதிவாளர்களின் கணினியில் உள்ளது. இந்த வசதியை முறையாக பயன்படுத்தினால், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை தடுக்கலாம் என்று, கூறப்படுகிறது.
இதனால், பத்திரப்பதிவு குறித்து, பொது மக்களிடம் நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதார் விபரங்களை சரிபார்க்கும் வசதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் நிலையில், ஆதார் சரிபார்ப்பு வசதியை செயல்படுத்துவதில் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில், காலதாமதம் ஏற்பட்டால், பத்திரப்பதிவு பணிகள் பாதியில் முடங்கும் நிலை ஏற்படும்.
இதை கருத்தில் வைத்து, தற்காலிகமாக சில நாட்களுக்கு மட்டுமே, இந்த வசதி நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த வசதியை பயன்பாட்டுக்கு கொண்டு வர, மென்பொருள் பராமரிப்பு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

