தமிழக மின் நுகர்வு புதிய உச்சம்: 19,400 மெகாவாட்டை தாண்டியது
தமிழக மின் நுகர்வு புதிய உச்சம்: 19,400 மெகாவாட்டை தாண்டியது
UPDATED : மார் 24, 2024 12:36 PM
ADDED : மார் 24, 2024 06:35 AM

சென்னை: தமிழக மின் நுகர்வு எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம் 19,409 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. முதல் முறையாக, இந்தாண்டு மார்ச்சிலேயே புதிய உச்சத்தை எட்டியதால், விரைவில் 20,000 மெகா வாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக பகலில் 15,000 மெகா வாட்டாகவும்; காலை, மாலையில், 16,000 மெகா வாட்டாகவும் உள்ளது. இது, கோடை காலத்தில் அதிகரிக்கும்.
அதன்படி, 2023 ஏப்., 20ம் தேதி மதியம் 12:00 மணிக்கு மின் நுகர்வு, 19,387 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, நேற்று முன்தினம் வரை உச்ச அளவாக இருந்தது.
கோடை காலம் துவங்கியதால், இம்மாத துவக்கத்தில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. அதனால், வீடுகள், அலுவலகங்களில், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் அறிவுரையை பின்பற்றி பலரும் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சாரத்தில் இயங்கும் பைக், கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற காரணங்களால், மின் நுகர்வு எப்போதும் இல்லாத வகையில் நேற்று முன்தினம் முற்பகல் 11:00 மணிக்கு, 19,409 மெகா வாட்டாக அதிகரித்தது.
அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதலை கையாண்டதால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை.
வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயில் மிகவும் அதிகம் இருக்கும்.
எனவே, அம்மாதங்களில் மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டும். இந்தாண்டு முதல் முறையாக மார்ச்சிலேயே மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால், விரைவில் 20,000 மெகா வாட்டை எட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஆண்டு வாரியாக
அதிகபட்சமின் தேவை
ஆண்டு - மெகா வாட்
2019 ஏப்., 3 16,151
2020 மார்ச் 26 16,481
2021 மார்ச் 29 17,196
2022 ஏப்., 29 - 17,563
2023 ஏப்., 20 - 19,387
2024 மார்ச் 22 - 19,409
* கடந்த, 2020, 2021 கோடை காலத்தில், 'கொரோனா' வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்படாததால் மின் தேவை அதிகரிக்கவில்லை.
ஆண்டு வாரியாக
அதிகபட்சமின் நுகர்வு
கடந்த 2020, 2021 கோடை காலத்தில், 'கொரோனா' வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் செயல்படாததால் மின் நுகர்வுஅதிகரிக்கவில்லை.

