உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கோரிக்கை வலுப்பதாக முதல்வர் தகவல்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கோரிக்கை வலுப்பதாக முதல்வர் தகவல்
ADDED : ஆக 05, 2024 09:41 PM
சென்னை:லோக்சபா தேர்தலுக்கு முன்பே, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். அதை கட்சி தலைமை ஏற்றிருந்தால், வாரிசு அரசியல் பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும்; வெற்றியை பாதிக்கும் என்பதால், அந்த தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது.
அதேநேரத்தில், கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் முக்கியத்துவம் தரும் வகையில், ஒருங்கிணைப்பு குழுவில் மூத்த அமைச்சர்களுடன் உதயநிதியும் இடம்பெற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் முதல்வருக்கு அடுத்த நிலையில், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தார்.
தேர்தல் வெற்றிக்கு பின், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என, இளைஞரணி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், சனாதனம் விவகாரம் தொடர்பான வழக்குகளும், அவற்றில் முன்ஜாமின் பெற வேண்டிய நெருக்கடி நிலையும் ஏற்பட்டதால், உதயநிதியின் பதவி உயர்வில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், 15 நாள் பயணமாக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். அநேகமாக, வரும் 27ம் தேதி அவர் புறப்படக் கூடும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு தரப்படும் என, கோட்டை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரம் முன், அதாவது 23ம் தேதியில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது நடக்காமல் போனால், முதல்வர் சென்னை திரும்பிய பின்னரே மாற்றம் செய்யப்படலாம் என்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் தனது தொகுதியான கொளத்துாரில் நேற்று அரசு பணிகளை, முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது, துணை முதல்வர் பதவி குறித்து, அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது; ஆனால், பழுக்கவில்லை,'' என்றார். இவ்விவகாரத்தில், எந்த உறுதியான பதிலையும் தெரிவிக்க, முதல்வர் மறுத்து விட்டார்.
முதல்வர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றம்?
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, இம்மாதம் 22ம் தேதி, அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அவர் 27ம் தேதி இரவு அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 15 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வகையில், முதல்வரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளை, அவர் சந்திக்கிறார்.