ADDED : மார் 27, 2024 04:26 AM

''பணியிட மாற்றத்துல ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக வனத்துறையில, சமீபத்துல துணை வன பாதுகாவலர்கள் பணியிட மாற்றம் நடந்துச்சு... இதுல சிலருக்கு, கேட்ட இடமும், பலருக்கு கேட்காத இடமும் கிடைச்சிருக்கு வே...
''நீலகிரி மாவட்டத்துல, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் வன அதிகாரிக்கும் நிச்சயம் மாறுதல் இருக்கும்னு துறை வட்டாரங்கள்ல எதிர்பார்த்தாவ... ஆனா, துறையின் உயர் அதிகாரிகள் ஆசியோடு இடமாறுதல் வராம, மலை மாவட்டத்துலயே நீடிக்காரு...
''இதனால, 'பல வருஷமா ஒரே இடத்துல இருக்கிற அதிகாரிகளை மாத்தணும்'னு, ஆளுங்கட்சிக்கு வேண்டிய சில அதிகாரிகள், துறையின் மேலிடத்துக்கு மனு அனுப்பியிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
இஷ்டத்துக்கு பந்தாடறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரி ஒருத்தர், அங்க இருக்கற ரெண்டு அமைச்சர்களிடம் நல்ல பெயர் எடுத்து, தேர்தல் முடிஞ்சதும் முக்கிய பதவிக்கு போயிடணும்கற பிளான்ல இருக்கார் ஓய்...
''இதனால, ஆளுங்கட்சியினர் சிபாரிசுப்படி, இன்ஸ்பெக்டர்களை இஷ்டத்துக்கு இடமாறுதல் பண்றார்... லஞ்சம் உட்பட பல குற்றச்சாட்டுகள்ல சிக்கியவங்களை கூட, 'சென்சிட்டிவ்'வான இடங்களுக்கு மாறுதல் போடறார் ஓய்...
''இத்தனைக்கும், இவருக்கு கீழே இருக்கற அதிகாரி தான் டிரான்ஸ்பர் போடணும்... ஆனா, அவருக்கு இவர் வாய்மொழியா உத்தரவு போட்டு, இன்ஸ்பெக்டர்களை துாக்கி அடிக்கறார் ஓய்...
'இந்த இடமாறுதல்ல பணமும் புழங்கறதா பேசிக்கறா... பெண் இன்ஸ்பெக்டர்கள் சிலரை, ஒரே மாசத்துல மூணு இடங்களுக்கு டிரான்ஸ்பர் பண்ணியிருக்கார் ஓய்...
''இதுல வெறுத்து போன ஒரு பெண் இன்ஸ்பெக்டர், தனக்கு அடுத்தடுத்து டிரான்ஸ்பர் போட்டதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில வழக்கே தொடர்ந்துட்டாங்க... உயர் அதிகாரி மேல, மத்திய மண்டலத்துல இருக்கிற எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளே அதிருப்தியில தான் இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மகனை ஜெயிக்க வைக்க போராடுறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாருங்க அந்த தலைவர்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தன் மகன் துரையை, அரசியல் வாரிசா வைகோ அறிமுகப்படுத்தியதை கண்டிச்சு, ம.தி.மு.க.,வுல இருந்து பலரும் வெளியே போனாங்கல்ல... இதுல, புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டாக்டர் சந்திரசேகர், திருச்சி லோக்சபா தொகுதியில இருக்கிற இன்னும் இரண்டு பேர், வைகோவுக்கு ஒருகாலத்துல ரொம்பவும் நெருக்கமா இருந்தவங்க பா...
''இப்ப, துரை வைகோ, திருச்சியில களம் இறங்கியிருக்கிறதால, இந்த மூணு பேரையும் வைகோ போன்ல தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டிருக்காரு... டாக்டர் சந்திரசேகர், 'நான் ஏற்கனவே கட்சியில இருந்து விலகிட்டேன்... இனிமே, என்னால தேர்தல் பணியில ஈடுபட முடியாது'ன்னு மறுத்துட்டாரு பா...
''மற்ற ரெண்டு பேரும், தங்கள் போன்களை ஆப் பண்ணி வச்சுட்டாங்க... துரையின் அரசியல் எதிர்காலமே திருச்சி வெற்றியில தான் அடங்கியிருக்குன்னு நினைக்கிற வைகோ, எந்த விலை கொடுத்தும் வெற்றியை வாங்கிடறதுன்னு தீர்மானிச்சிருக்காரு... பெரிய அளவுல பணத்தை இறக்கவும் முடிவு பண்ணிட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.

