ADDED : பிப் 22, 2025 05:41 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கனிமவளக் கொள்ளையில் யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் என்றும், அரசு அலுவலர்களுக்கு பணம் வழங்கப்பட்டது குறித்தும் எழுதிய டைரி ஒன்றின் பக்கம் பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் ஜன. 28ல் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சாத்துார் வேப்பிலைப்பட்டியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.
கனிமவளக் கொள்ளை தடுக்க தவறியதாக சாத்துார் தாசில்தார் உள்ளிட்ட 7 பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
இதில் வேளாண் உதவி அலுவலர் முத்துக்குரு சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது யார் யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய டைரியின் பக்கம் என ஒன்று பரவி வருகிறது. அதில் கிராவல் விற்கப்பட்ட விவரம், கனரக வாகனங்களுக்கு பணம் வழங்கப்பட்ட விபரம், அரசு அலுவலர்களுக்கு பணம் வழங்கப்பட்ட விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப். 16 முதல் சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதில் வெளிப்படை தன்மையோடு டைரி விவகாரத்தின் உண்மை தன்மையையும் கையில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.