ADDED : செப் 17, 2011 10:56 PM
இன்னும் நான்கு வாரங்களில், தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளனர்.
அரசியல் கட்சிகளின் சார்பிலும், சொந்த செல்வாக்கிலும் தேர்தல் களமிறங்க துடிக்கும் வேட்பாளர்கள், மக்களை கவர்ந்து ஓட்டுகளை பெற சூப்பர் திட்டமிட்டுள்ளனர். 'அரசு மட்டும்தான் இலவச திட்டங்களை வழங்குமா; நாங்களும் கொடுப்போம்லா' என்று, வரிந்து கட்டிக்கொண்டு இப்போதே வாரி வழங்க ஆரம்பித்து விட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல பேரூராட்சி, ஊராட்சிகளில் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் பலரும், தங்கள் சக்திக்கு ஏற்றபடி, வாக்காளர்களை இப்போதே கவனிக்கத் தொடங்கி விட்டனர். தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒருவர், ஐந்து மாதத்திற்கு, கேபிள் 'டிவி' கட்டணத்தை இலவசமாக்கி உள்ளார். வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒருவர், ஓராண்டு முழுவதும் ஒரு வீட்டிற்கு வாரம் மூன்று தண்ணீர் கேன் (ஒரு கேன் 20 லிட்டர்) இலவசமாக வழங்கி வருகிறார். மேலும் சிலர், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை ஆண் வாக்காளர்களுக்கு இரண்டு நாளைக்கு ஒரு முறை, 'ஆப் பாட்டில்' சரக்கு அல்லது இரண்டு, 'பீர்'களுக்கான டோக்கன் வழங்கி வழங்கி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவித்த பின், தேர்தல் கமிஷனின், 'ஸ்கேனிங்' பார்வையிலும் சிக்காத வகையில், மேலும் பல பரிசுகளை வாக்காளர்களுக்கு வாரி வழங்க காத்திருக்கின்றனர். எப்படியோ, வாக்காளர்கள் காட்டில் மீண்டும் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது!
- நமது சிறப்பு நிருபர் -

