ADDED : ஆக 17, 2025 01:55 AM
சென்னிமலை, ஆவெள்ளோட்டை அடுத்த தண்ணீர்பந்தல் வேலம்பாளையத்தில் உள்ள, ௧,௦௦௦ ஆண்டுகள் பழமையான சுயம்பு கிருஷ்ண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஆண்டு தோறும் லட்சார்ச்சனை விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு ஆறாமாண்டு விழா நேற்று நடந்தது. கோபூஜையுடன் விழா தொடங்கி. கோவில் பட்டாச்சாரியார் சுதர்சன பட்டாச்சாரியர் தலைமையில் காலை, 8:௦௦ மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி மாலை வரை நடந்தது.
இதேபோல் வீரப்பன்பாளையம் கிருஷ்ணதுளசி கோசாலையில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் ராதை-கிருஷ்ணர் வேடமிட்டு பசுக்களுடன் கும்மி, கோலாட்டத்துடன் ஊர்வலம் நடந்தது.
* அம்மாபேட்டை அருகே பூனாச்சி சமையதாரனுாரில் பிரசித்தி பெற்ற கலியபெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிருஷ்ணர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, 108 நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் கோமாதா பூஜை, யாக வேள்வி நடந்தது.
உறியடித்து வழிபாடு
பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையம் வேணுகோபாலசுவாமி, கருடபகவான், கோபாலகிருஷ்ணர் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, பச்சை மூங்கில் மரத்தை, பவானி ஆற்றுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். அதில் தேங்காய் ஒன்றை கட்டி கோவில் முன்புறம் நட்டனர். நேற்று காலை முதல் சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. மாலையில் கருட வாகன சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதையடுத்து இரவில் உறியடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. மூங்கில் மரத்தில் கட்டப்பட்ட தேங்காயை குச்சி மூலம் உடைக்க பக்தர்கள் முயற்சித்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு உட்டி மரம் பிடுங்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

