1 கோடி வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை; சப்பை கட்டு கட்டும் தமிழக மின்வாரியம்
1 கோடி வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை; சப்பை கட்டு கட்டும் தமிழக மின்வாரியம்
ADDED : ஜூலை 17, 2024 12:08 AM

சென்னை : 'அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட அதிக இழப்பால், வட்டி செலவு அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இம்மாதம், 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை, 4.83 சதவீதம் உயர்த்தி, ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதற்கான காரணம் குறித்து, மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த, 2011 - 12ல், 18,957 கோடி ரூபாயாக இருந்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த இழப்பு, 10 ஆண்டுகளில், 96,712 கோடி ரூபாய் அதிகரித்து, 2021 மார்ச்சில், 1.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
நிதியிழப்பை, 2021 - 22ல் இருந்து, 100 சதவீதம் முழுதும் அரசே ஏற்கும் என்ற தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாட்டை போல், முந்தைய காலத்தில் எவ்வித உறுதியும் வழங்கப்படவில்லை.
இதனால் மின் பகிர்மான கழகம், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாக, 2011 - 12ல் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகத்திற்கு, 43,493 கோடி ரூபாயாக இருந்த கடன், பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து, 2021 - 22 வரை, 1.60 லட்சம் கோடி ரூபாயாக மாறியது.
இதனால், 2011 - 12ல் ஆண்டுக்கு, 4,588 கோடி ரூபாயாக இருந்த கடன்களின் மீதான வட்டி, 259 சதவீதம் உயர்ந்து, 2020 - 21ல், 16,511 கோடி ரூபாயாக அதிகரித்தது.
இவ்வாறு அதிகரித்து வரும் நிதியிழப்பை ஈடுசெய்ய, மின் கட்டணம் உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அதிக கட்டண உயர்வால், நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய சுமையை கருதி, அரசு நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாதபடி, ஆண்டுதோறும் சிறிய அளவில் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது.
மத்திய மின் அமைச்சக வழிகாட்டுதலின்படி, மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதியை பெற, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது, முதல் நிபந்தனை.
இந்த வகையில், 2022 - 23ல் மின்கட்டண உயர்வு, ஏழு மாதங்களுக்கு மட்டும் உயர்த்தப்பட்டது. 2023 ஜூலை முதல், 2.18 சதவீதம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான உயர்வு முழுதும், அரசே ஏற்றது. இம்மாதம் முதல், 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 2.47 கோடி வீடுகள் மற்றும் குடிசை வீட்டு நுகர்வோர்களில், 1 கோடி பேருக்கு, கட்டண உயர்வு இல்லை
இரு மாதங்களுக்கு மொத்தம், 200 யூனிட் வரை பயன்படுத்தும், 63 லட்சம் வீடுகளுக்கு மாதம் அதிகபட்சமாக, 5 ரூபாய் மட்டுமே உயரும். 300 யூனிட் வரை பயன்படுத்தும், 35 லட்சம் வீடுகளுக்கு மாதம், 15 ரூபாய் வரை மட்டுமே உயரும்
இரு மாதங்களுக்கு, 400 யூனிட் வரை பயன்படுத்தும், 25 லட்சம் வீடுகளுக்கு மாதம் அதிகபட்சம், 25 ரூபாயும்; 500 யூனிட் வரை பயன்படுத்தும், 13 லட்சம் வீடுகளுக்கு மாதம், 40 ரூபாய் உயரும்
2.19 லட்சம் சிறு, குறுதொழில்களுக்கு யூனிட்டிற்கு, 20 காசு உயரும்
விசைத்தறி நுகர்வோருக்கு, 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 1,001 யூனிட் முதல், 1,500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு, 20 காசும், அதற்கு மேல் உள்ள யூனிட்களுக்கு, 25 காசுகள் உயரும்.
தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டிற்கு, 35 காசும்; 22.36 லட்சம் சிறு வணிக நுகர்வோருக்கு மாதம், 15 ரூபாய் உயரும்
உயரழுத்த தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு, 36 காசு உயரும்
நிலைக் கட்டணம் கிலோ வாட் ஒன்றுக்கு மாதம், 3 ரூபாய் முதல், 27 ரூபாய் வரை உயரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.