ADDED : மே 24, 2024 04:10 AM
சென்னை : மழை நீரில், 10,832 ஏக்கர் வேளாண் பயிர்கள் மூழ்கியுள்ளன. மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலத்தில், தமிழகத்திற்கு இயல்பாக 12.5 செ.மீ., மழை கிடைக்கும்.
இந்த ஆண்டு மார்ச் 1 முதல் நேற்று முன்தினம் வரை, 12.44 செ.மீ., மழை பெய்துஉள்ளது. இது, இயல்பை விட, 1 சதவீதம் குறைவு.
கடந்த சில தினங்களாக, மாநிலம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மின்னல் தாக்கி தலா ஒருவர், சேலம் மாவட்டத்தில் சுவர் இடிந்து ஒருவர் மழைக்கு இறந்துள்ளனர்.
கடந்த 16ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை, 15 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 13 கால்நடைகள் இறந்துள்ளன; 40 குடிசை வீடுகள் சேதமடைந்து உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில், ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 136 பேர் நேற்று காலை வீடு திரும்பினர்.
நெல், சோளம், பருப்பு, எள், கடலை, பருத்தி, கரும்பு என, 10,832 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன என, வருவாய் துறை தெரிவித்துள்ளது.