ADDED : ஏப் 30, 2024 06:11 AM

சென்னை : கடலோர மாவட்டங்களில் உஷ்ணம் அதிகரிக்கும்; 14 மாவட்டங்களில், 2, 3ம் தேதிகளில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், இன்று முதல் 1ம் தேதி வரை, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று முதல் 3ம் தேதி வரை, தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 43 டிகிரி செல்ஷியஸ்; அதாவது, 109 டிகிரி பாரன்ஹீட்டை எட்டும்.
கடலோரம் அல்லாத மாவட்டங்களில், காற்றில் ஈரப்பதம் 50 சதவீதமாக இருக்கும். கடலோர பகுதிகளில், காற்றில் ஈரப்பத அளவு 80 சதவீதமாக இருக்கும். அதனால், இந்த மாவட்டங்களில் அதிக உஷ்ணத்தால், அசவுகரியமான சூழல் ஏற்படும்.
வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் என, 14 மாவட்டங்களில், வரும், 2, 3ம் தேதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
109 டிகிரி பாரன்ஹீட்
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக ஈரோடில், 43 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மீனம்பாக்கம், பாளையங்கோட்டை 38; நாமக்கல், 39; தர்மபுரி, தஞ்சாவூர், கோவை, மதுரை, திருச்சி, திருத்தணி, வேலுார் 40; கரூர் பரமத்தி 41; சேலம், திருப்பத்துார் 42 டிகிரி செல்ஷியஸ் என, 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டியது.
கொடைக்கானல் 24; குன்னுார் 28; ஊட்டி 29; வால்பாறை 31; காரைக்கால், துாத்துக்குடி 35; நாகை, சென்னை நுங்கம்பாக்கம் 36; கன்னியாகுமரி, பாம்பன், புதுச்சேரி 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இந்த முறை கோடைக் காலத்தை பொறுத்தவரை, மார்ச் முதல் பெரும்பாலான நாட்களில், ஈரோடு மாவட்டம் தொடர்ந்து, வெயிலின் அதிகபட்ச வெப்பநிலை பட்டியலில் முதல் இடமாக நீடிக்கிறது.
இதுவரை அதிகபட்சமாக, 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது.

